“பெற்றோர்கள் தங்கள் சொந்த உழைப்பால் சம்பாதித்த வீட்டில் அவர்கள் கருணையுடன் அனுமதித்தால் மட்டுமே அவர்களுடன் மகன்கள் தங்கியிருக்க முடியும். அவர்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி ஆகாதவராக இருந்தாலும் சரி. பெற்றோர் வெளியேறச்சொன்னால் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது” இப்படி தடாலடியான தீர்ப்பு ஒன்றை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.
உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீட்டுக்கு வந்த ஒரு குறிப்பிட்ட வழக்கில் “தனது மகனும் மருமகளும் தங்களுடன் இருந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் எங்கள் சம்பாத்தியமும் இந்த வீட்டில் இருக்கிறது ஆகவே வெளியேற முடியாது என்கிறார்கள்” என்பது பெற்றோர் தரப்பு வாதம். “இந்த வீட்டில் தங்களது சம்பாத்தியம் உள்ளது ஆகவே வெளியேற முடியாது” என்பது மகன் தரப்பு வாதம்.
இந்த வழக்கில் பெற்றோர் தரப்புக்கு சாதகமாக ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து மகன் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா ராணி, “தங்களுடைய வருமானம் இந்த வீட்டில் இருக்கிறது என்பதை மகனால் நிரூபிக்க முடியவில்லை. இச்சூழலில் பெற்றோருக்கு பாரமளிக்காத வகையில் அவரும் அவரது மனைவியும் வெளியேற வேண்டும். பெற்றோர் விரும்பும் வரை மட்டுமே பிள்ளைகள் அவர்களுடன் வாழ அனுமதிக்க முடியும். அவர்களது விருப்பத்துக்கு மாறாக அவர்களுக்கு பாரமாக அவர்களுடன் வசித்து வருவதை நீதிமன்றம் அனுமதிக்காது” என்று தீர்ப்பளித்தார்.