புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தளவு இடஒதுக்கீட்டின் காரணமாக, 11,000 ஓபிசி மாணாக்கர்களுக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளதைப் பற்றி கவலை தெரிவித்து சுட்டிக்காட்டி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, “மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில், நீட் தேர்வு மூலமாக நிரப்பப்படும் அகில இந்திய மருத்துவக் கோட்டாவில் ஓபிசி மாணாக்கர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு ஒரு விரிவான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
“அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், 15%, 7.5% மற்றும் 10% இடங்கள் முறையே, பட்டியலின, பழங்குடியின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியப் பிரிவுகளைச் சேர்ந்த மாணாக்கர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில்தான் இந்த நிலை.
மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஓபிசி பிரிவு மாணாக்கர்களுக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இதரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 2017ம் ஆண்டு முதல், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், ஓபிசி பிரிவு மாணாக்கர்கள் மொத்தம் 11000 இடங்களை இழந்துள்ளனர்.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததே இதற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.
இந்துக்கள்… இந்துக்கள்..! என்று தங்களின் அரசியலுக்காக வெற்றுக் கூச்சலிடும் சங்பரிவாரக் கட்சி, அந்த இந்துக்களில் மிகப்பெரும்பான்மையினரான ஓபிசி -களை பலவகைகளில் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்பதே சமூகப் பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது.