பெங்களூர்:
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர்.

ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 7ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த 11ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 18 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இணைய உள்ளனர். இதற்காக இருவரும் இன்று கர்நாடகா வருகை தர உள்ளனர். நவராத்திரி பூஜையை முன்னிட்டு ராகுல் நடைபயணம் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 2 நாட்கள் ராகுல் காந்தியுடன் சோனியா, பிரியங்கா தங்க உள்ளனர்.

பின்னர் அக்டோபர் 6-ஆம் தேதி ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியாவும் பிரியங்காவும் சிறிது தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். ராகுல் காந்தி மொத்தம் 3,600 கி.மீ.தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது வரை சுமார் 600 கி.மீ. தொலைவை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.