காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
‘ஜி-23’ என இந்த தலைவர்களுக்கு ஊடகங்கள் அடைமொழி கொடுத்துள்ளன. இந்த தலைவர்களை சோனியா காந்தி நாளை (சனிக்கிழமை) சந்தித்து பேச்சு நடத்துகிறார்.
அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சோனியா ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என அதிருப்தி தலைவர்கள், இந்த ஆலோசனையின் போது சோனியாவிடம் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
– பா. பாரதி