டில்லி
முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்
நிதிநிலை அறிக்கைத் தொடர் பாராளூமன்றத்தில் நடைபெற்றும் நிலையில் இன்று காலை காங்கிரஸ் பாராளுமன்றக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
சோனியா தனது உரையில், “பாஜக அரசு முழுக்க முழுக்க விளம்பர நோக்குடன் செயல் பட்டு வருகிறது. பாஜகவின் இலக்கு குறைவான செயல்பாடு மற்றும் அதிகமான விளம்பாரம் என்பதே. தற்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றபின் கட்சி புது வேகத்துடன் பயணம் செய்கிறது. ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான். நாம் அனைவரும் இணைந்து அவருடன் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதற்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றி. வரும் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டிய நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தொண்டர்களாகிய நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நமது கட்சி வெற்றி பெறும் இலக்குடன் பணியாற்ற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.