டில்லி:
மகாராஷ்டிர மாநிலத்தல் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.
தற்போது பாஜக சிவசேனை கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவில், அக்டோபர், நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேசி வருகிறது.
கடந்த தேர்தலின்போது தேசியவாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலிலும் கூட்டணியைத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தொகுதிகள் ஒதுக்கப்படுவது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த மாநில முன்னணி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.