ஜெயப்பூர்: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஜெய்ப்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று (பிப்.14) காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்கலவைத் தேர்தலுக்கு சோனியா காந்தி போட்டியிடுகிறார்.
முன்னதாக, , மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999 முதல் 2022 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, ஐந்து முறை மக்களவை எம்.பி-யாக இருந்தவர். இவர் கடந்த கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, இதுதான் எனது கடைசி தேர்தல் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.