டில்லி
இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் 22 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. ஆனால் சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கபடடவில்லை. கடந்த 7 ஆம் தேதி முதல் நேற்று ஒரு நாள் தவிர தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவிலான ஒரு பிரசார திட்டத்தை இன்று காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து 22 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்படும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களின் வாழ்வை மேலும் கடுமையாக்குவதாகவும் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் உயர்த்தப்பட்ட கலால் வரி மற்றும் தற்போதைய விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.