டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த எம்.பி.யுமான சோனியா காந்தி, அவரது மகனும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, மற்றும் வயநாடு எம்.பி.யான பிரியங்கா ஆகியோர் நேரில் வந்து மன்மோகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட மூத்த நிர்வாகிகள் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக மன்மோகன்சிங் மறைவையொட்டி, ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மன்மோகன் சிங் ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது.
திருமதி கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நான் ஒரு வழிகாட்டி மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து நேற்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 9.51 மணிக்கு இறந்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றி உள்ளார். 1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு நிதியமைச்சராக மன்மோகன் சிங் புகழ் பெற்றார். மேலும் இந்த ஆண்டு தொடக்கம் வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் மன்மோகன் சிங்.