நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு:

முகமது நபிகள், கதீஜா பீவி இல்லற அன்பு குறித்த “மாணிக்ய மலயராயி பூவி” என்ற, கடந்த 40 ஆண்டுகளாக மலையாள முஸ்லிம் குடும்பங்களின் திருமண நிகழ்வுகளில் பாடப்பட்டு வரும் பாட்டு விரைவில் வெளியாக விருக்கும் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் சேர்க்கப்ட்டுள்ளது. அந்தப் பாட்டைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள தாஃபுல் இஃப்டா ஜமியா நிஜாமியா என்ற நிறுவனம் ஃபட்வா அறிவித்திருக்கிறது.

இது பற்றி முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “சமுதாயத்தின் எந்தப் பிரிவிலிருந்து சகிப்பின்மை வெளிப்பட்டாலும் அது ஏற்கத்தக்கதல்ல,” என்று கூறியுள்ளார். “இந்து, முஸ்லிம் இரு பிரிவுகளையும் சேர்ந்த வெறியர்கள் சமுதாயத்தில் இப்படிப்பட்ட சகிப்பின்மையைப் பரப்புவதில் ஒரு சதி இருக்கிறது என்று மக்கள் கருதுவார்களானால் அதற்காக மக்களைக் குறைகூற முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முகமது நபி, கதீஜா பீவி இருவருக்கும் இடையே காதல் முகிழ்த்தது பற்றியும், பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டது பற்றியும் பேசுகிற அந்தப் பாடலை பி.எம்.ஏ. ஜப்பார் எழுதி, தலசேரி ரஃபீக் பாடி, 1978ல் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் மாப்ளாபட்டு பாடகர் இரஞ்ஜோலி மூசா பல இடங்களிலும் பாடி அந்தப் பாடலை மக்களிடையே கொண்டு சேர்த்தார் என்ற தகவலையும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ரெட் சல்யூட் காம்ரேட் பினராயி விஜயன்.