நரேந்திர மோடியும், அவரின் நம்பிக்கைக்குரிய தளபதியும் வலதுகரமுமான அமித்ஷாவும் என்ன நினைக்கிறார்கள், எதை செய்யப் போகிறார்கள் என்பதை கணிப்பது அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல! அடுத்தவர்களை யூகத்திலேயே வைத்திருப்பது அந்த இருவருக்கும் கைவந்த கலை.
நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியினுடைய அமைச்சரவைப் பட்டியலும் அதை உறுதிப்படுத்துகிறது. முன்பு, உத்திரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத்தை அவர்கள் தேர்வுசெய்தபோது, பல அரசியல் பிரமுகர்களுக்கு எதுவுமே புரியவில்லை.
தற்போது, நிதியமைச்சகப் பொறுப்புக்கு பியூஷ் கோயலை விடுத்து, நிர்மலா சீதாராமனை தேர்வு செய்திருப்பதும் ஆச்சர்யம்தான். அதுவும், இந்தமுறை பியூஷ் கோயல் அமைச்சரவையில் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மேனகா காந்தி மற்றும் ராஜ்யவர்தன் ரத்தோர் போன்றோர் அமைச்சரவையிலேயே சேர்க்கப்படவில்லை. தர்மேந்திர பிரதானுக்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரியிடமிருந்த கப்பல் துறை பறிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் ஒத்துவரும் நபர்களுக்கு மட்டுமே தேர்நதெடுத்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. மற்றபடி, செயல்திறன் என்பதெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ளும் விஷயம் என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.