வரலாற்றில் சில திருத்தங்கள்! இந்த தொடர் வெடிக்கும்: உடன்கட்டை ஏறுதல்
அத்தியாயம் -5 இரா.மன்னர் மன்னன்
பள்ளிக்கூட வரலாற்றுப் பாடத்தில் ராஜாராம் மோகன்ராயைப் பற்றிப் படிக்க நேர்ந்த போதுதான் ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற ஒன்று நம்மில் பெரும்பாலானோர்க்கு அறிமுகமாகி இருக்கும். உடன்கட்டை ஏறுதல் என்றால் ‘கணவன் இறந்த பிறகு அவனோடு அவன் காதல் மனைவியும் தீயில் இறங்குவது’ – என்பதுதான் இன்றைக்கும் நமது பொதுவான புரிதல். ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற சொல்லாட்சியானது ’ஒரு பெண் விரும்பிச் செய்யும் செயல்’ என்ற தொணியையே கொண்டுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.
கணவனை இழந்த பெண்கள் அதற்குப் பிறகு வாழக் கூடாது – என்ற முடிவை எடுத்தது அந்தப் பெண்கள் அல்ல நமது சமூகம்தான். பிணமாகலாமா? நடைபிணமாகலாமா? – என்ற முடிவை மட்டுமே அந்தப் பெண்கள் சொந்தமாக எடுத்தனர். சிலருக்கோ அதற்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட வில்லை. அவர்கள் கட்டாயப்படுத்திக் கொலை செய்யப்பட்டனர் என்பதே உண்மை.
18ஆம் நூற்றாண்டில், வங்கத்தில் உடன்கட்டையை அல்லது சதியை (ஆங்கிலத்தில் SATI) நேரில் கண்ட ஒரு ஐரோப்பியரின் குறிப்பு கீழே அப்படியே கொடுக்கப்படுகிறது.
‘சிதைக்கு தீ மூட்ட வேண்டிய அந்த உறவினர் அவளை (இறந்தவரின் மனைவியை) ஆறுமுறை சிதையைச் சுற்றிவரச் செய்தார். பின்னர் அவள் தன் கணவனின் சவத்திற்கு அருகில் படுத்துக் கொண்டு தன் ஒரு கையை அவனுடைய கழுத்தின் கீழ் வைத்து, மற்றொரு கையை அவன் மேல் வைத்து அணைத்துக் கொண்டாள்.
பின்னர் காய்ந்த தென்னை ஓலைகளும் பிற பொருட்களும் அவர்கள் மீது பெரும் உயரத்திற்குக் குவிக்கப்பட்டன. பின்னர் நெய் மேலே ஊற்றப்பட்டது. அடுத்து இரண்டு மூங்கில்கள் அவர்கள் மீது வைக்கப்பட்டு கீழ்நோக்கி பலமாக அழுத்திக் கொள்ளப்பட்டு பின்னர் சிதைக்குத் தீ மூட்டப்பட்டது.
அது உடனே கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. தீ வைக்கப்பட்ட உடனே கூடியிருந்தோர் பெரும் கூச்சல் போட்டனர். அந்த பயங்கரக் கூச்சலினால் அந்தப் பெண் முனகினாளா அல்லது வாய்விட்டுக் கதறினாளா என்பதைக் கேட்பது சாத்தியமற்றதாக இருந்தது. மேலிருந்த அந்த மூங்கில்கள் அவளை பலமாக அழுத்திக் கொண்டிருந்ததால் அவள் அசைவதோ தப்பிக்க முயல்வதோ சாத்தியம் அல்ல.
மூங்கில்களை அழுத்திப் பிடிக்கும் முறையை நாங்கள் பலமாக ஆட்சேபித்தோம். நெருப்பு சுடும்போது அந்தப் பெண் எழுந்திருக்காமல் தடுப்பதற்காகவே இவ்வாறு மூங்கில்கள் அழுத்தப்படுவதாக நாங்கள் எதிர்த்தோம். ஆனால் சிதை சரிந்துவிடாமல் இருக்கவே அப்படிச் செய்வதாக அவர்கள் கூறினார்கள். மேலும் ஒருநொடிக் கூட அதைப் பார்க்க முடியாதவர்களாய் நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினோம்.
நாங்கள் கண்ட இந்த பயங்கரச் செயலினால் அதிர்ச்சி அடைந்து ‘இது அப்பட்டமான படுகொலை” என்று உரக்கக் கத்திக் கொண்டே சென்றோம்’.
நீங்கள் மேலே படித்தது, ஒரு பெண்ணை சம்மதிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட சதி, இது போலன்றி சம்மதிக்காத பெண்களை சிதையில் வீசி, அடித்துப் படுக்கவைத்த சதிகளும் நடந்தன. மக்கள் இவற்றை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்திக் கொண்டதால் எந்த எதிர்ப்பும் சதிக்கு எழவில்லை. சதியில் இறக்கும் பெண் தன் கணவனோடு மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு சொர்க்கத்தில் வாழ்வாள் என்று நம்பப்பட்டது.
இதே போல சொர்க்கத்தில் அரசருக்கு வேலையாட்கள் வேண்டும் என்று வேலைக்காரர்களை இறந்த அரசரோடு புதைக்கும் வழக்கம் சீனா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் முன்னர் இருந்தது. சிந்துபாத்தின் கதைகளில் ஒன்றில் மனைவி இறக்கும் போது அவள் உடலுடன் கணவனையும் பிணக்குழிக்குள் போடும் வழக்கம் ஒரு பண்டைய நாட்டில் இருந்ததாக வருகிறது. இந்த உலகளாவிய படுகொலை வழக்கங்களில் இறுதிவரை நீடித்த வெகுசிலவற்றில் சதியும் ஒன்று.
இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து அங்கீகாரங்களோடும் இருந்த சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் கி.பி.1829ஆம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் பின்புலமாக இருந்து செயல்பட்டவரே நாமறிந்த ராஜாராம் மோகன்ராய். பெண்களோடு தொடர்புடைய சதி வழக்கத்தை ஆணாகிய ராஜாராம் மோகன்ராய் ஏன் எதிர்த்தார்?.
கி.பி.1811ஆம் ஆண்டில் ராயின் சகோதரர் ஒருவர் தனது இளவயதில் திடீர் மரணத்தைச் சந்தித்தார். அவரது உடல் எரிக்கப்பட்டபோது, கூடவே தனது இளவயது அண்ணியும் வலுக்கட்டாயமாக உயிரோடு தீயில் வீசப்பட்டதை ராய் பார்த்தார்.
அந்தப் பெண்ணின் உடலைப் பற்றிய ’தீ’தான் ராயை சதிக்கு எதிராக மனம் புழுங்க வைத்தது. ராய் முன்னெடுத்த போராட்டங்கள், பிரச்சாரங்களின் விளைவாக சதிக்கு சட்ட ரீதியான தடையும் கிடைத்தது. இந்திய சட்டத்தின்படி கி.பி.1829ஆம் ஆண்டிலேயே சதி தடை செய்யப்பட்டாலும், நவீன இந்தியாவிலும் சதி வழக்கம் பல விதங்களில் தொடர்ந்தே வருகின்றது.
கடந்த 1987ஆம் ஆண்டின் ’ரூப் கன்வர் வழக்கு’க்குப் பிறகு, சட்டத்திற்குத் தெரியாத வண்ணம் பல சதிகள் மறைக்கப்பட்டு வருகின்றன. அதனால் சதி என்ற வழக்கம் மறைந்து விட்டதைப் போன்ற மாயத் தோற்றமே நம் முன்பாக உண்டாக்கப்பட்டு உள்ளது. அது என்ன ரூப் கன்வர் வழக்கு? யார் அந்த ரூப் கன்வர்?.
இந்தியாவெங்கும் 2000 ஆண்டுகளாக உடன்கட்டை வழக்கம் இருந்தாலும், சட்டம் தடை போட்ட பிறகு தமிழகம் போன்ற பகுதிகளில் அவை பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. ஆனால் உடன்கட்டையை கொண்டாடும் இந்திய மரபினர்களாக வங்காளிகள் மற்றும் ராஜபுத்திரர்கள் இன்றும் உள்ளனர். அவர்களே சதியை இன்றும் உயர்ந்த சமயச் சடங்காக, தங்கள் குலத்தின் பெருமையாகப் பார்க்கின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ராஜபுத்திரக் குடும்பத்தின் மருமகள் இந்த ரூப் கன்வர். ’ஜெய்பூரின் பேரழகி’ என்று கொண்டாடப்பட்டவர் இவர். 1987ஆவது ஆண்டில் ஓர்நாள் ரூப்கன்வரின் கணவன் திடீரென இறந்துவிட அவனுக்குப் பாடை செய்யும் போதே ரூப் கன்வருக்கும் பாடை செய்து, அவரை மக்கள் மத்தியில் ஊர்வலமாகத் தூக்கிக் கொண்டு சுடுகாடு சென்றிருக்கிறார்கள் ஜெய்ப்பூர் ராஜபுத்திர குடும்பத்தினர். ரூப்கன்வரின் அழுகையையோ அரற்றலையோ அங்கிருந்த யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
சுடுகாட்டில் ரூப்கன்வரை இறக்கிய பிறகு, உறவினர்கள் 4 பேர்கள் அவரைப் பிடித்துக் கொள்ள, அவருக்கு மயக்க ஊசி போடப்படுகிறது. பின்னர் அவர் தனது கணவரின் சிதையில் வீசப்படுகிறார். சதி வெற்றிகரமாக நிறை வேற்றப்படுகிறது. அப்போது ரூப்கன்வருக்கு வயது 18.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலர் வழக்கு தொடுத்தனர். ஆனால் அந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் ’குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்ற அடிப்படையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
பின்னர் ரூப்கன்வர் தீயில் வீசப்பட்ட இடத்தில் ‘சதி மாதா ஆலயம்’ கட்டப்பட்டு. இப்போதும் அங்கு வழிபாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டில்கூட ‘ஒரு ராஜஸ்தானத்து பெண்மணி உடன்கட்டை ஏறினார்’ – என்ற செய்தி வந்து உள்ளது. ரூப்கன்வர் ஒரு காற்புள்ளிதான் முற்றுபுள்ளி அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சதி வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதற்கு மக்களின் பழமைவாத மனப்பான்மையே முக்கியக் காரணம்.
இன்றைக்கும் பல சமயவாதிகள் ‘உடன்கட்டை ஏறும் பெண்கள் கணவன் மீதான அன்பால் அப்படிச் செய்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள். அன்பினால் விளையும் காதலை ஏற்காத ஒரு சமூகம், படுகொலைக்கு அன்பை ஒரு முகமூடியாகக் காட்டுவதை அறிவுடையவர்கள் எப்படி ஏற்க முடியும்?. 2000 ஆண்டுகால இந்திய வரலாற்றில் கோடிக்கும் மேற்பட்ட மனைவிகள் கணவன்களுக்காக உடன்கட்டை ஏறிவிட்டார்கள். ஆனால் மனைவிக்காக சிதையில் பாய்ந்த கணவர்களோ பத்து இருபதைத் தாண்ட மாட்டார்கள். அன்பில் கூட ஆண்பால் பெண்பால் உண்டா என்ன?.
உண்மையில் கணவன் மீதான அன்பை விடவும் சமூகத்தின் அடக்குமுறையே உடன்கட்டை என்ற வழக்கத்தை ஏற்க பெண்களைத் தூண்டுவதாக இருந்து உள்ளது.
கணவனை இழந்த பெண்களின் முடிவு மூன்று விதங்களில் இருக்கும் என்று சங்க இலக்கியங்க ளும் மனுதர்மமும் கூறுகின்றன. முதல் வகை அவள் தன் கணவன் இறந்ததைக் கேட்ட உடனேயே உயிரை விட்டுவிடுவாள். இவளே பத்தினி என்று போற்றப்பட்டாள். இரண்டாவது வகை தன் கணவனின் சிதையில் அவளும் பாய்ந்துவிடுவாள் அல்லது உயரமான மலை அல்லது குன்றில் இருந்து குதித்து இறப்பாள். இந்த இரண்டு வழக்கங்களுமே சதியின் வகைகள்தான். இவள் யார் வாயிலும் அகப்படமாட்டாள். இவளுக்கும் பத்தினி என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இழப்பு அதிகம் என்றாலும் மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் பெண் இதில் மூன்றாம் வகை. அவளை இந்தச் சமூகம் பார்த்த பார்வைதான் அத்தனைக் கோரமானது.
தமிழகத்தின் மதிப்பிற்குரிய துறவிகளுள் ஒருவரான காஞ்சி மகா பெரியவர், தனது ’தெய்வத்தின் குரல்’ நூலில் ஒரு மூத்த சமயவாதியாக, விதவைகள் குறித்து சாதாரணமாகக் கூறும் மென்மையான வார்த்தைகள் கூட இவர்கள் மீது வலிமையான கணைகளாகப் பாய்கின்றன. சில உதாரணங்கள் மட்டும்…
1. கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொதுவிதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்த வர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்க முடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள். (அப்போது கணவன் இறந்ததைக் கேட்ட பின்னர் உயிரோடு இருப்பவர்கள் பதிவிரதைகள் இல்லையா?. கண்ணகி, கோசலை – எல்லாம் யார்?)
2. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமல் இருக்கும். அதை எடுத்து வந்து பூஜை பண்ணுவதுண்டு. (தீயில் வீசப்பட்ட பெண் தீ சுடுகிறது என்றால் அவள் செத்தாலும் பத்தினி இல்லையா?)
3. இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும். (கற்பில் என்ன உயர்வான கற்பு, தாழ்வான கற்பு?)
4. ’பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒருதரமாவது ஊரில் இப்படி ஒரு ஸ்த்ரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளை விட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. (உடன்கட்டை உயர்ந்த உணர்ச்சியா?).
சமீபகாலத்தில் வாழ்ந்து மறைந்த, இளகிய மனம் கொண்ட ஒரு துறவியின் மனதில் இருந்து வந்த சிந்தனைகள் இவை எனும்போது, பண்டைய காலத்தில் விதவைகளின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணைவனை இழப்பது என்பதே ஒரு மாபெரும் சோகம். அப்படியாக இழந்த பெண்ணிடம் போய், ‘உன் கணவன் இறந்ததைக் கேட்ட பிறகும் உனக்கு உயிர் போகவில்லையா? உன் கற்பு அவ்வளவுதானா?’ – என்று கேட்டால் அவள் என்ன செய்வாள்?. இப்படியான சூழலில்தான் பல பெண்கள் உடன்கட்டைக்கு உடன்பட்டனர்.
அப்படியும் கூட, குழந்தைகள், கடமைகள் போன்ற காரணங்களால் உடன்கட்டைக்கு உடன்படாத பெண்களை இந்தச் சமூகம் படுத்திய பாடுகள் இருக்கின்றதே… அந்தப் பாடுகள்தான் ‘விதவையாக வாழ்வதை விடவும் சுமங்கலியாக சாவதே மேல்’ என்ற எண்ணத்தை இந்து சமூகத்தின் அனைத்துப் பெண்களிடத்திலும் ஏற்படுத்தியது. அதன் தாக்கம் சங்க இலக்கியங்களில் விரவி உள்ளன.
விதவைப் பெண்களை சங்க இலக்கியங்கள் ஆளில் பெண்டிர், கழிகல மகளிர், பருத்திப் பெண்டிர், தொடிகழி பெண்டிர், படிவ மகளிர், உயவற் மகளிர் என்று பல தரக்குறைவான பெயர்களால் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் வாழ்வின் பொருட்டு மிகக் கடுமையான நோன்பை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். இது கைம்மை நோன்பு என்று அழைக்கப்பட்டது. இதன் படி கணவனை இழந்த பெண்கள் 5 விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
1. அணிகலன்களை அணியக் கூடாது. (இதனால் அழகு குறையும் என்று கருதப்பட்டது)
2. தலையை மொட்டை அடித்துவிட வேண்டும் (இதனார் முக்காடு வந்துவிடும், மலர் சூடுவது நின்றுவிடும்)
3. பத்திய உணவினையே உண்ண வேண்டும், அதனையும் குறிப்பிட்ட வேளைகளுக்கு மட்டுமே உண்ண வேண்டும். (உடல் சுணங்கும், உணர்ச்சிகள் மட்டுப்படும்)
4. பாய் கூடப் பயன்படுத்தக் கூடாது. (சிலர் தரையில் உறங்க அனுமதிக்கப்பட்டனர். சிலர் உடலைக் குத்தும் சிறிய பரளைக் கற்களில் தூங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இது நல்லுறக்கத்தைக் கெடுக்கும்)
5. குறிப்பிட்ட ஒரு பணியை மட்டும் வாழ்நாள் எல்லாம் செய்தல். (இதில் பருத்தி நூற்றல் பெரும்பாலானவர்களின் பணியாக இருந்தது. ’பருத்திப் பெண்டிர்’ என்ற பெயர் இவர்களுக்கு இதனால் வந்தது. இது இவர்கள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக வளராமல் செய்தது.)
மேற்கண்ட கட்டளைகளில் பல இவர்கள் மீது பிற ஆண்கள் ஆசைப்படக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்தினால் வந்தவை, பெண்மையை நேரடியாக இழிவு செய்பவை. இவற்றைத் தாங்க எந்தப் பெண்ணும் விரும்பவே மாட்டாள்.
கைம்மை நோன்பே உடன்கட்டை ஏறுவதற்குக் காரணம் – என்பதற்கான பல சான்றுகள் நமது சங்க இலக்கியங்களிலேயே உள்ளன. பூதப் பாண்டியனின் மனைவியான பெருங்கோப் பெண்டு என்பவள் உடன்கட்டை ஏறும் முன்பாக பாடிய ஒரு சங்கப் பாடல் தமிழகத்தில் இன்றும் சிலாகிக்கப்படும் பாடல்களில் ஒன்று. அதில் ஒரு பெண்ணில் மனநிலை தெளிவாகவே காட்டப்பட்டுள்ளது. அப்பாடல்,
பல் சான்றீரே! பல் சான்றீரே!
’செல்க’எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடைந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.
(பொருள்: கணவனுடன் நீயும் ‘செல்’ என்று சொல்லாமல், ’போகாதே (ஒழிக) என்று சொல்லும் பொல்லாத சூழ்ச்சி செய்யும் சான்றோர்களே, கணவனை இழந்த பெண்கள் வெள்ளரிக்காய் விதைபோல விரைத்த, நெய்யில்லாத நீர்ச் சோற்றையும், எள்ளின் துவையலையும், புளி (மட்டும்) சேர்த்து சமைத்த வேளக்கீரையையும் மட்டுமே உண்ண வேண்டும், பாய்கூட இல்லாமல் பரளைக் கற்கள் உறுத்தும் தரையில் படுக்க வேண்டும். அது போல வாழும் விதவை நானல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப்படுக்கை கடினமாக இருக்கலாம். ஆனால் (இதனோடு ஒப்பிடும்போது) எனக்கு அப்படி இல்லை. என் கணவன் இறந்ததால் தாமரை பூத்த குளமும், சிதையும் எனக்கு இப்போது ஒன்றுதான்’.)
இந்தப் பாடலுக்கு விளக்கம் எழுதிய பலரும் இதில் வரும் ’பொல்லா சூழ்ச்சிப் பல்சான்றீரே’ – என்ற சொற்களுக்கு, பொல்லாத ஆய்வை உடைய சான்றோர், பொல்லாத துக்கத்தை உடைய சான்றோர் – என்றே அர்த்தம் எழுதி உள்ளனர். பொல்லாத சூழ்ச்சி செய்தவர்கள் – என்ற நேரடியான அர்த்தம் இதனால் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாடலின் முழு அர்த்தமும் திரிக்கப்பட்டு, இந்தப் பாடல் உடன்கட்டையை சிறப்பிப்பது என்றும் கூறப்பட்டு வருகின்றது.
உண்மையில் ‘விதவைகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சூழ்ச்சி செய்து விதிகளை ஏற்கனவே வகுத்துவிட்டு, என்னை இப்போது விதவையாக வாழச் சொல்கிறீர்களே’ – என்றே அரசி இங்கே கேள்வி கேட்கிறாள். மேலும் ‘சான்றோர்களே…’ என்று அவள் எள்ளலாகவே அழைக்கிறாள். இதனையும் உரையாசிரியர்கள் மறைக்கிறார்கள்.
சங்க இலக்கியங்கள் காட்டும் இந்தச் ‘சான்றோர்கள்’ இன்னும் பல சூழ்ச்சிகளை தமிழகத்தில் செய்து உள்ளனர். அதனால் இவர்களை மற்றொரு சங்ககாலப் புலவர் ‘பயனில்லாமல் வாழ்ந்து வயதைக் கடந்த சான்றோர்களே’ என்று அழைத்துள்ளார். அவரை இந்தச் சான்றோர்கள் பதிலுக்கு ‘நரிவெரூத் தலையார்’ (நரிகளும் கண்டு அஞ்சும் தலையை உடையவர்) என்று பெயரிட்டனர். அவரது பெயர் இப்போதும் நமது பாட நூல்களில் அப்படியே உள்ளது. (பின்னர் இது குறித்து பல புனைகதைகள் உருவாகின.)
இந்தக் கொடுங்கோல் சான்றோர்கள் அன்றைய தமிழகத்தின் ஆதிக்கச் சக்தியாக இருந்தவர்கள் என்பதையே இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. இவர்கள் உடன்கட்டையைத் தவிரவும் தமிழகத்தின் வேறு பல சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்து உள்ளனர். அது வேறு ஆய்வு.
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அவள் தனித்து வாழ்வதோ, மறுமணம் செய்வதோ அவளது விருப்பம். அதில் சான்றோர்கள் தலையிட என்ன இருக்கின்றது?. அவளுக்குக் கட்டளைகள் போட, கொல்ல, வதைக்க இவர்கள் யார்?.
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டையை ஒழித்த போதும் ’சான்றோர்கள்’ வகுத்த கொடிய கைம்மை வழக்கங்களில் பல இன்றும் பல இடங்களில் உள்ளன. பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது, விழாக்களுக்குப் போகக் கூடாது – போன்ற பல வழக்கங்களை நாகரிகத்தில் மேம்பட்ட மக்களே பின்பற்றுகின்றனர். இவை உள்ளபோது பெண்கள் உடன்கட்டையைத் தேர்ந்தெடுப்பதை நாம் முற்றிலும் தடுத்துவிட முடியாது. எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பதை நிறுத்த முடியாது.
இதனால்தான் பெரியார், ‘ராஜாராம் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனுடனேயே பெண்டாட்டியையும் கொளுத்திட்டா அப்புறம் இந்த சமுதாயம் அவளை வதைக்க முடியாதே… தாலி அறுத்த பெண்ணுக்கு சுகம் ஏது? எங்கேயோ சொர்க்கம் இருக்காமே, அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடன் கஷ்டம் முடியும்’ – என்று ஒரு மேடையில் விரக்தியுடன் சொன்னார். காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை.
உத்திரப் பிரதேச அரசின் ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்’ கடந்த 2006ஆம் ஆண்டில் ‘விருந்தாவன் விதவைகள் காப்பகம்’ என்ற ஒன்றை ஆரம்பித்தது. இதனைப் நிர்வகிக்கும் பொறுப்பு ‘அகில பாரதிய மாசாரதா சமாஜ் கல்யாண் சமிதி’ என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்து ஆதரவற்ற விதவைகள் இங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் வயோதிகம் மற்றும் நோய்களால் இறந்த போது ’விதவைகளை அடக்கம் செய்ய மாட்டோம்’ என்று அந்த அமைப்பு மறுத்துவிட்டது. அதனால் அந்த விதவைகளின் உடல்கள் குப்பை அள்ளுவோரிடம் கொடுக்கப்பட்டன. அவர்கள் சாலை விபத்தில் இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது போல அந்த உடல்களை வெட்டி, சாக்குகளில் திணித்து அப்புறப்படுத்தினார்கள். இன்றும் விதவைகள் பற்றிய கீழான எண்ணங்கள் புரையோடிப் புழுத்த ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கின்றது என்பதற்கு இது இன்னொரு ஆதாரம்.
இந்தியாவில் கணவனை இழந்த பல பெண்களுக்கு மறுமணம் என்ற வாய்ப்பு இன்றும் வழங்கப்படுவதே இல்லை. இத்தனைக்கும் அது ஒன்றும் அதி நவீன கருத்து இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வரலாற்று ஆய்வாளர்களால் மனுதர்மத்திற்கு மூத்தது என்று கருதப்படும் அர்த்த சாஸ்திரம் விதவைகள் மறுமணத்திற்கு அனுமதி அளித்து உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அசோகரின் வாரிசுகள் அழிக்கப்பட்ட பிறகு அர்த்த சாஸ்திரம் மவுரியர்களின் ஆட்சியில் பெற்றிருந்த செல்வாக்கை மனுதர்மம் தனதாக்கியதே உடன்கட்டைகள் பெருகவும், மறுமண முறை அழியவும் காரணமாக இருந்த்து. மனுதர்மம் விதவை மறுமணத்தை விபச்சாரத்தோடு ஒப்பிட்டது.
ஆனால் சொத்து உரிமையைப் பற்றிப் பேசும் இடத்தில் அதே மனுதர்மம்,
’(செல்வத்திற்கு உரியவரான) கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டியது (மனு: 9:190)’ – என்றும் சொல்கிறது. இந்தக் கேவலத்தை மதச் சடங்கு என்று ஏற்பவர்கள், உடன்கட்டை என்ற கோரத்தை மட்டும் நியாயப்படுத்தி ஏற்பது எப்படி சரியாகும்?.
இன்றைய சமூகத்திற்கு உடன்கட்டை குறித்த உண்மைகளைக் கூறுவது, பெண்ணடிமைத்தனம் ஒழிய பெரிதும் உதவி செய்யும். அதன் முதல் படியாக பாட நூல்களில் ‘உடன்கட்டை ஏறுதல்’ என்பது நீக்கப்பட்டு, ‘உடன்கட்டை ஏற்றப்படுதல்’ அல்லது ‘உடன்கட்டை ஏற்றுதல்’ என்பது மாற்றுச் சொல்லாக பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ‘பெண்களை உடன்கட்டை ஏற்றியது யார்?’ – என்ற கேள்வி மாணவர்கள் மனதில் தாமாகத் தோன்றும், ‘பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளால் உடன்கட்டை ஏறினர்’ என்ற உண்மையும் அவர்களுக்கு விளங்கும். இந்தச் சிறிய வார்த்தை வேறுபாடு பல அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தும்.
’தாழ்ந்தவர்’ என்று ஒருவரைச் சொல்வதற்கும் ‘தாழ்த்தப்பட்டவர்’ என்று ஒருவரைச் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா?, அதே போன்ற வேறுபாடு இந்த மாற்றத்தின் மூலமும் உணரவைக்கப்பட வேண்டும். பாவங்களுக்கு எதற்குப் புனிதப் போர்வை?