வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – பொருளற்ற பொன்னாடை

அத்தியாயம்:9                                                   இரா.மன்னர்மன்னன்

 

மிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் மேடைகளில் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது என்று ஒரு வழக்கம் உள்ளது. பொன்னாடை போர்த்துவதால் ஒருவருக்கு என்ன சிறப்பு ஏற்படப்போகிறது என்று நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. சில பிரபல இதழ்களின் கேள்வி பதில் பகுதிகளில் ’பொன்னாடைகள் ஏன் போர்த்தப்படுகின்றது?’ – என்ற மக்களின் கேள்விக்கு அறிஞர்கள் சிலரே கூட ‘இது தேவையற்ற வழக்கம், துணி வீண்’ என்ற ரீதியிலேயே பதில் அளித்து உள்ளனர்.

அவர்களை நாம் குறைகூற முடியாது. ஏனெனில் சால்வைகள் அணியும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை. அதற்கான குளிர்ந்த சூழலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இல்லை. எனவே அவற்றுக்கு பதிலாக அணியக் கூடிய உடையை அல்லது தைத்துப் பயன்படுத்தும் துணியைக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் பொன்னாடையின் உண்மையான மதிப்பு அதன் உபயோகத்தில் இல்லை, மாறாக அதன் வரலாற்றில் உள்ளது.

பொன்னாடையைப் பற்றி விரிவாக அறிய, முதலில் தமிழரின் ஆடை அணியும் வழக்கத்தைப் பற்றி போதுமான அளவுக்குத் தெரிந்து கொள்வோம். இடுப்பில் அணியும் அரையாடையை தமிழர்கள் தொன்றுதொட்டு அணிந்தனர். ஆனால் மேலாடை அணிவது தமிழரின் பொதுவான வழக்கம் அல்ல. இன்று தமிழகத்தின் ஆண்கள் அணியும் மேல் சட்டைகளும், பெண்களின் ரவிக்கைகளுமே கூட நமது பாரம்பரியத்தைச் சேர்ந்தவை அல்ல.

கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசனான முதலாம் சடையவர்மனின் அவைக்கு வந்த வெனிஸ் நாட்டின் வரலாற்றுப் பயணியான மார்க்கோ போலோ தமது குறிப்புகளில் ‘நமது நாட்டின் தையல் கலைஞர்களுக்கு இந்த நாட்டில் வேலையே இல்லை. இங்கு அரசனே கோவணம் மட்டும்தான் கட்டியிருக்கிறான்’ என்று எழுதுகிறார். பிற்காலப் பாண்டியர் காலம் வரையில் மேல்சட்டை அணியும் வழக்கம் தமிழர்களிடத்தில் பொதுமைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்தக் குறிப்பு காட்டுகின்றது. இதே காலத்தில் சோழர்கள் தொடைவரைக்கும் துணி உடுத்தி இருந்தனர். அவர்களும் மேலே சட்டை அணியவில்லை. அவர்களுக்கு மேல் சட்டை அணிதல் என்ற வழக்கத்தைப் பற்றித் தெரிந்து மட்டும் இருந்தது.

மேலாடை அணியும் வழக்கத்தை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் கிரேக்கர்கள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் கிரேக்கர்களை ‘மெய்ப்பை புக்கும் யவனர்கள்’ என்றும் ‘புடம்புகு மிலேச்சர்’ என்றும் குறிப்பிட்டு இருப்பதில் இருந்தே நாம் இதனை அறிந்து கொள்ளலாம். கிரேக்கர்கள் சட்டை போட்டிருந்ததாகக் கொள்ளாமல் ‘அவர்கள் சட்டைக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள் (புடம் புகுந்தார்கள்)’ என்று கூறும் அளவுக்குத்தான் மேல்சட்டையின் பயன்பாடு நமக்கு அப்போது தெரிந்திருந்தது.

பின்வந்த காலங்களிலும் கூட சட்டை நமக்கு அந்நியம்தான். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்றிய பிறகு, தமிழகத்தில் ஆங்கிலோ-இந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சமூகமாகத் தோன்றினர். அவர்கள் மேற்சட்டை அணியும் வழக்கம் கொண்டுந்தவர்கள் ஆகையால் தமிழக மக்கள் அவர்களை ‘சட்டைக்காரர்கள்’ என்றே அழைத்தார்கள். இன்னும் இந்தச் சொல் வழக்கம் தஞ்சை, நாகை பகுதிகளில் பயன்பாட்டில் உண்டு.

குறிப்பாக தமிழகத்தில், ஆண்கள் மேல்சட்டை அணிவது அவசியமற்ற ஒன்றாகவே இருந்தது. நமது ஊரின் சூழலும் ஏழ்மையும் அதன் பிற காரணங்கள். நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் தனது சட்டையைத் துறக்கக் காரணம் மதுரையில் அவர் தமிழக விவசாயிகளைப் பார்த்ததே என்பதை இங்கு நாம் நினைவுகூற வேண்டும். அதன் சாட்சியாக காந்தியின் கடைசி சட்டை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது.

இப்படியாக மேலாடை அணிவது என்பதே தமிழர் பாரம்பரியத்தில் இல்லாதபோது பொன்னாடை நமது பாரம்பரியத்தில் சேருமா என்றால் சேரும் என்பதுதான் ஆச்சர்யமூட்டும் பதில். இதன் பின்னாக மனித உரிமையின் ஒரு சங்கிலிப் பிணைப்பு உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பண்டைய இந்தியாவில் அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கம் இந்தியாவிற்கும் மட்டும் உரியது இல்லை, உலகின் பல நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் வழக்கில் இருந்த ஒன்று. இன்றைய குழந்தைகள் விரும்பிப் படிக்கும் ஆங்கிலக் கதை புத்தகமான ஹாரிபாட்டரில் வரும் ’டாபி’ என்ற அடிமை பூதம் தனது எஜமான் தனக்கு புதிய ஆடை தரும் நாளே தனக்கு விடுதலைநாள் என்று கூறும். ஆடையை வைத்து அடிமைத் தனத்தை நிலைநாட்டியதில் மேலைநாடு கீழைநாடு என்ற பேதமே இல்லை!.

தமிழகத்தில் இத்தனைக் காலமாக வாழ்ந்துவரும் நமக்கு, அடிமைகள் மேற்சட்டை அணியக் கூடாது என்ற பண்டைய வழக்கு பற்றி எப்படித் தெரியாமல் போனது? – என்றால் காரணம் நமது கவனக் குறைவு மட்டும்தான். நாம் நன்றாக அறிந்த மஹாபாரதக் கதையில் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் காட்சி நமக்கு அறச்சீற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் இதனை நாம் நன்றாகக் கவனித்திருந்தாலே நமக்கு ஆடைக்கும் அடிமைத்தனத்துக்குமான உறவு கொஞ்சமாவது புரிந்திருக்கும்.

’துச்சாதனன் அரசவையில் வைத்து பாஞ்சாலியின் துகிலை உரியக் காரணம் என்ன?’ – என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் ’பாஞ்சாலியை அவமானப்படுத்த’. ஆனால் சரியான பதில் ‘பாஞ்சாலியை அடிமைப்படுத்த!’. ஏனெனில் அன்றைக்கு மேலாடை அணியும் உரிமை என்பது சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமான உரிமையாக இருந்தது!.

மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தன்னையும் தம்பிகளையும் பணயமாக வைத்துத் தோற்ற தருமன் உடனே கவுரவர்களுக்கு அடிமையாகின்றான். அடிமையானதன் விளைவாக ‘அடிமைகள் மேலாடை அணியக் கூடாது’ என்ற விதியின் அடிப்படையிலேயே அவனும் தம்பிகளும் முதற்கட்டமாக மேலாடைகளைத் துறக்கின்றான்.

இதனைத் மகாபாரதத்தின் வழிநூலான தனது ’பாஞ்சாலி சபத’த்தில் பண்டைய மரபுகளை நன்றாக அறிந்திருந்த பாரதியார்

’பணிமக்கள் ஏவா முன்னம் தெவ்வர் கண்டு

அஞ்சும் மார்பினைத் திறந்தனர் துணியைப் போட்டார்’

– என்று குறிக்கின்றார். பின்னர் பாஞ்சாலியும் தருமனால் சூதில் பணயமாக வைத்து தோற்கப்படுகிறாள். இதனால் அவளும் அடிமை என்று அந்த அரசவை கருதுகிறது. அடிமையானதனாலேயே அவளது மேலாடை நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. துரியோதனின் அரசவையில் இருந்த கர்ணன் இதனைச் சொல்வதாக,

‘மார்பிலே துணியைத் தாங்கும்

வழக்கம் கீழடியாக் கில்லை’

– என்று பாரதியார் குறிக்கிறார். பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டது பாஞ்சாலிக்கு மட்டும் நேர்ந்த கொடுமைகளின் உச்சம் அல்ல, முன்னர் அடிமைகள், தாழ்த்தப்பட்ட பெண்கள் அனைவரும் சந்தித்த கொடுமைகளின் மிச்சம்.

கி.பி.18ஆம் நூற்றாண்டில் இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர். அவர்கள் அனைவருக்குமே ஆண், பெண் பேதமின்றி மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அறிவு பெற்ற மக்களும் ஆட்சியாளர்களும் இருந்த இடங்களில் இந்த நடைமுறை பெரிதும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற இடங்களில் இது கட்டாய நடைமுறையாக இருந்தது. இன்றும் கூட கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெரியவர்கள் தங்கள் துண்டை மேலே போடாமல் கக்கத்தில் வைத்துச் செல்லும் காட்சிகளை நாம் கனத்த இதயத்துடன் காண முடியும். அடிமைகளுக்கு மேலாடை அணியும் வழக்கம் மறுக்கப்பட்டதற்கும், பொன்னாடைக்கும் என்ன தொடர்பு?.

ஒருவர் பிறப்பால் மேலாடை அணியும் உரிமை அற்ற அடிமையாக இருந்தாலும் பெரிய மனிதர்கள் கூடிய அவையானது அவருக்கு ஒரு மேலாடையைப் போர்த்தினால் அன்று முதல் அவர் அந்த உரிமையைப் பெற்றவராக கருதப்படுவார். மக்களும் அவர் அவ்வாறு உரிமை பெற்றதை அறிந்து கொள்வார்கள். அப்படி ஆடை போர்த்திய வழக்கத்தின் நீட்சிதான் பொன்னாடை போர்த்தும் வழக்கம். அதுவரை மேலாடை அணியாத ஒருவர் முதன்முதலாக அணியும் ஆடை என்பதனால்தான் ‘பொன்னாடை’ என்று ஒரு துணித்துண்டு சிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கமே அறிஞர்கள் கூடிய அவை ஒருவருக்குச் செய்த சிறப்புகளில் எல்லாம் மேம்பட்டதாகவும் கருதப்பட்டது. அந்த முறையே இன்றும் தொடர்கிறது. பொன்னாடை என்பது ஒரு மனிதன் தன் முயற்சியால் அடிமைத் தளையை அறுக்க முடியும் என்பதற்கு இறுதியாக உள்ள சான்று. அது தேவையற்ற துணி இல்லை. தேசியக் கொடியைப் போல ஒரு பெருமித்ததின் சின்னம், கடந்த காலத்தின் காலக் கண்ணாடி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி, பெண்களின் மேலாடை அணியும் உரிமை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளின் கைகளில்தான் இருந்தது. அவர்களில் மிகப்பெரும்பாலானோர் ஆண்கள். அவர்கள்தான் மேலாடை அணிவதை ஆதிக்கத்தின் பெயரால் தடைசெய்தவர்கள்.

மேலாடை அணியும் உரிமையை சாதியோடு தொடர்புபடுத்தி திருவிதாங்கூர் அரசர்கள் பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் எழுத்துகளில் வடிக்க இயலாத கோரங்கள். இந்தக் கொடுமை களுக்கு எல்லாம் எதிராக, தோள்சீலைப் போராட்டத்தை முன்னெடுத்து, தங்கள் மார்பகங்களை அடக்கு முறையாளர்கள் மீது அறுத்துவீசி, பெண்கள் பெற்ற சுதந்திரம்தான் மேலாடை அணியும் சுதந்திரம்.

தோள்சீலைப் போராட்டம் போன்ற பல்லாயிரக் கணக்கான உரிமைப் போராட்டங்களின் விளைவாகவே நமக்கு இன்று பொன்னாடைகளின் பொருள் கூடத் தெரியாமல் போய்விட்டது. நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் யார்? அரவணைத்து உதவியவர்கள் யார்? – என்பனவற்றைக் கூட இன்றைய பெண்கள் மறந்துவிட்டனர்.

இன்று மீண்டும் அதே ஆதிக்க சமூகம் ‘பெண்கள் சரியாக மேலாடை அணிவது இல்லை’, ‘சரியாகத் துப்பட்டா போடுவதில்லை’, ‘தமிழர் பண்பாட்டைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்’ என்றெல்லாம் புதிய ஆயுதங்களோடு புறப்படுவது காலம் காட்டும் முரண். கடந்த காலம் தெரியாதவர்கள் இந்த கூற்றுகளை ஆதரிப்பதும் ஆபத்தானது.

தனது வரலாற்றின் பெரும்பகுதியை இழந்துவிட்ட தமிழர்கள், இன்றும் வழக்கில் காணப்படும் கடந்த காலத்தோடு தொடர்புள்ள வெகுசில வரலாற்று எச்சங்களையாவது அவற்றின் உண்மை வரலாற்றோடு சேர்த்து பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் நரிகள் நாட்டாமை பேச, ஆடுகள் தலையாட்டும் சமூகமாக நாம் நாட்களைக் கடத்துவதை ஒருபோதும் நம்மால் மாற்ற முடியாது.