சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 8 இ்நதிய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அரபிக்கடலில் ஏமன், சோமாலிய நாடுகளுக்கு நடுவே உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி சென்றுகொண்டிருந்த ‘அல் கவுசர்’ எனும் சரக்குக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்டது.

அதில் இருந்த மாலுமிகள் 10 பேரையும், கப்பலையும் சிறைபிடித்த கொள்ளையர்கள் அவர்களை விடுவிக்க பெருமளவு பணம் கேட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கொள்ளையர் கள் பதுங்கி இருக்கும் இடத்தைக் கண்டறிந்த அந்நாட்டு ராணுவத்தினர், கடந்த திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி, கப்பலையும், அதில் இருந்த 2 மாலுமிகளையும் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து இந்திய மாலுமிகள் எட்டு பேருடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த சோமாலிய கடற்படை வீரர்கள், மீதமுள்ள இந்திய மாலுமிகள் 8 பேரையும் நேற்று மீட்டனர்.

இதுபற்றி அந்நாட்டு கடற்படை துணை கமாண்டர் அப்திரஷித் முகமது அகமது கூறும்போது, கடற்கொள்ளையர்களை சுற்றி வளைத்ததில் அவர்கள் 8 பேரையும் விடுவித்தனர்.

கொள்ளையர்களுடன் எந்தவித மோதலும் நடைபெறவில்லை. அப்போது, தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களில் 4 பேர் பிடிபட்டுள்ளனர். மீட்கப்பட்ட 8 பேரும் நலமுடன் உள்ளனர் என்றார்.