இந்தியாவின் முக்கிய மதுபான உற்பத்தியாளரான ராடிகோ கைதான் (Radico Khaitan) ‘திரிகால்’ (Trikal) என்ற பெயரில் பிரிமியம் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த பிரிமியம் விஸ்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முக்காலமும் அறிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இந்து மதக் கடவுளான சிவபெருமானுடன் நெருக்கமாக தொடர்புடைய ‘திரிகால்’ என்ற பெயர், மதக் குழுக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொங்கி எழச் செய்தது.
தேவபூமி அல்லது “கடவுள்களின் நிலம்” என்று குறிப்பிடப்படும் உத்தரகண்ட் போன்ற ஒரு மாநிலத்தில், ஒரு மதச் சொல்லை மதுபானப் பொருளுடன் இணைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உத்தரகண்ட் கலால் ஆணையர் ஹரிச்சந்திர செம்வால், ‘திரிகால்’ விஸ்கியை எந்த வகையிலும் மாநிலம் அங்கீகரிக்கவில்லை என்றும், தெய்வங்கள் அல்லது மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய பெயர்களைப் பயன்படுத்தும் எந்தவொரு தயாரிப்பும் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.
மேலும், இதுபோன்ற சரிபார்க்கப்படாத அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற தவறான தகவல்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கலால் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், 8 PM, Magic Moments, Royal Ranthambore, மற்றும் Rampur Indian Single Malt போன்ற பிராண்டுகளை தயாரிக்கும் மதுபான உற்பத்தியாளரான Radico Khaitan, ‘திரிகால்’ சர்ச்சை குறித்து இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.