கொரோனா லாக்டவுன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்ந்து வரும், அந்த நிலையை தொடர பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், மென்பொருள் துறையில், வீட்டில் இருந்து வேலை செய்வதால், பணி விகிதம் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவியல், கடந்த ஆண்டு (2020) பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதுபோல, இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களில் பணியாற்றிய லட்சக்கணக்கானோர் சொந்த ஊரில் தஞ்சமடைந்தனர். ,அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன. இதனால், சாமானிய மெக்கள், லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பை சந்தித்ததுடன், அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியானது. பல நிறுவனங்கள் தங்களது நிறுவன ஊழியர்களின் ஊதியத்தை குறைத்து நடவடிகக் எடுத்தனர்.
பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், உற்பத்தி துறையில் குறைந்த அளவிலான பணியாட்களைக் கொண்டு இயக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மற்ற நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த பணி ஓராண்டை கடந்தும் தொடர்கிறது. சமீப நாட்களாக பல நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு குறைந்த அளவிலான ஊழியர்களுடன் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள், மீண்டும் அலுவலகம் வர தயங்கியதுடன், வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்புகின்றனர்.
இதுதொடர்பாக இந்தியாவின் முன்னணி வேலை வாய்ப்பு இணையதளமான இண்டீட் (Indeed) கருத்து கணிப்பு நடத்தியது. அதில், 59% நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறையை விரும்பவில்லை என தெரிவித்துள்ளன.
கொரோனா பாதிப்பில் இருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், வழக்கம்போல் நிறுவனத்திற்கு வந்து ஊழியர்கள் பணியாற்றும் முறை மீண்டும் பின்பற்றப்படும் என 70 சதவிகித நிறுவனங்கள் கூறியுள்ளன.
பெரு நிறுவனங்களில் 67 % பேரும், மத்திய தர நிறுவனங்களில் 70% பேரும் ரிமோட் வேலை முறை சரியானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஸ்டார்ட் அப், மென்பொருள் நிறுவனங்களில் 90 விழுக்காட்டினர் கொரோனா இயல்பு நிலைக்கு பிறகே அலுவலகம் வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
50 % ஊழியர்கள் மட்டுமே வேலைக்காக மீண்டும் நகரங்களுக்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊரில் இருந்து வேலை பார்க்கும் போது வரும் ஊதிய குறைப்புகளை எதிர்கொள்ள 32 % தயாராக உள்ளனர்.
88 % பேர் ஊதிய குறைப்பு சரியல்ல என்று நிறுவனங்களை சாடியுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இண்டீட் இணையதளத்தின் நிர்வாக இயக்குனர், “கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரை ரிமோட் அல்லது வீட்டில் இருந்து வேலை தொடர்பான தேடல்கள் 437 விழுக்காடு அதிகரித்துள்ளது. புதிய ஐடியாக்கள் மூலம் ஊழியர்களிடம் பணியின் திறன் குறையாமல் வேலையை பெறுவதற்கு, நிறுவனங்கள் கூடுதலாக சிந்திக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள ஆபிஸ் செட்டப் பெரிதும் உதவியாக இருப்பதாக நிறுவனங்கள் சிந்திக்கின்றன. அவை சரியாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.