டில்லி:
2 குழந்தைக்கு மேல் குழந்தை பெறுபவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யுங்கள் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் அரசுக்கு ஆலோசனை கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பிரபல யோகா குருவும், பதஞ்சலி நிறுவன தலைவருமான குரு ராம்தேவ், 2குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யலாம் .. அவ்வாறு செய்தால், நாட்டின் ஜனத்தொகை குறைந்துவிடும் என்று ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், தன்னைப்போன்ற திருமணம் செய்து கொள்ளாதவர்கள் சிறப்பு மரியாதைக்குரியவர்கள் என்றும், எங்களைப் போன்றவர்கள் சிறப்பு மரியாதை பெற வெண்டும், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் தான் தன்னை போல் புகழ்பெற முடியும் எனவும், சாதனைகள் புரிய முடியும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
தற்போது 2 குழந்தைகளுக்கு அதிகமாக பெறும் தம்பதிகளின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது” என்றும் தெரிவித்து உள்ளார்.
நமது நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்துவோ அல்லது முஸ்லிமோ அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களின் ஓட்டுரிமை, அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகள் ஆகியவற்றை பறிக்க வேண்டும். அத்தகையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்கள் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசு வேலையும் தரக்கூடாது. அப்போது தான் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். அப்படி செய்தால் மக்கள்தொகை தானாக குறைந்து விடும் என தெரிவித்துள்ளார்.
பாபா ராம்தேவின் இந்த புதிய ஆலோசனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.