டில்லி,
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த சர்ச்சை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு
கடந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி ராணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கல்வித்தகுதி தொடர்பாக மாறுபட்ட தகவல்களை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அவர் தனது கல்வித் தகுதி தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்து இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது.
இதன் காரணமாக ஸ்மிருதி ராணிக்கு எதிராக டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் அஹ்மெர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஹர்விந்தர் சிங் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, அமைச்சர் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லி பல்கலைக்கழகத்துக்கும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தேர்தல் ஆணையம் ஸ்மிருதி ராணி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது.
இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி, ஸ்மிருதி ராணி அமைச்சராக இருப்பதால் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்து விட்டன, கோர்ட்டிற்கு நகல் ஆவணங்கள் தேவையில்லை. எனவே, ஸ்மிருதி ராணி எதிராக சம்மன் அனுப்பக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்தார்.