டில்லி:

பிரச்சார் பாரதி ஊழியர்களினம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒப்புக் கொண்டுள்ளார்.

தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய வானொலி நிலையங்களை பிரசார் பாரதி நிர்வகித்து வருகிறது. இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். நாடாளுமன்ற சட்டப்படி இது உருவாக்கப்பட்டது. எனினும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பிரச்சார் பாரதி செயல்படுகிறது.

இதன் அமைச்சராக ஸ்மிருதி இராணி உள்ளார். இவருக்கும், பிரச்சார் பாரதி தலைமைக்கும் இடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது என்று ‘தி வயர்’ இணையதள இதழ் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் ஊழியர்கள் சம்பளத்துக்கான நிதியை அமைச்சகம் ஒதுக்க மறுத்து வருகிறது என்று பிரச்சார பாரதி தலைவர் சூர்யபிரகாஷ் அதில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கான நிதி பட்ஜெட்டில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஜனவரி, ஃபிப்ரவரி மாத சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சூர்ய பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பள பிரச்னை விஷயத்தை சூர்ய பிரகாஷ் தேச விரோதிகளிடம் கசிய விட்டதாக ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே உடன் படிக்கை ஏற்பட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பிரச்னையை நாடாளுமன்றம் கையில் எடுத்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எம்.பி.க்கள் அடங்கிய குழு இந்த விஷயத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தி வயர் மீண்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஸ்மிருதி இராணி, சூர்ய பிரகாஷின் குற்றச்சாட்டை மறுக்கவில்லை. ஊழியர்களின் சம்பள நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது. அமைச்சகத்தின் சில உத்தரவுகளுக்கு பிரச்சார பாரதி கீழ்படிவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் பிரச்சார பாரதி கையெழுத்திட வேண்டியுள்ளது. இதனால் தான் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது என்று அமைச்சகம் தரப்பில் நியாயப்படுத்தப்படுகிறது. நிர்வாக செலவு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துடன் பிரச்சார் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. .