திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வரும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று (ஜுன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவச் செல்வங்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு இன்றே பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,  தமிழகத்தில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 ஆயிரம் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

தமிழ்நாடு கல்வித் துறையில் சிறந்து விளங்குகிறது. தற்போது,  தமிழகம் போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன் போட்டிப்போட்டு வருகிறது என்றவர்,  நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாகஇருக்கிறது. இதை திமுக  ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறது என்றவர், தற்போது,  நீட்தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசான மகாராஷ்டிரா ஷிண்டே அரசு வலியுறுத்தி உள்ளது என்பதை சுட்டிக்காட்டினர். மேலும்,   இந்த முறை நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா வகையிலும் கடுமையாகப் போராடுவோம் என்றவர்,  இனிமேல் தான் ஆட்டமே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.