சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின்போது பெய்த மழை காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள் நிரம்பின. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதே வேளையில் தலைநகர் சென்னையும் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியான சென்னை திநகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை நகரில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு, வடிகால்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறி விட்டதால், தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஸ்மாட்டி சிட்டிக்காக நடைபெற்ற பணியும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் திரு.ஸ்டாலின், கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியதே தியாகராயா நகர் பகுதியில், மழைநீர் தேங்கியதற்கு காரணம் என குற்றச்சாட்டினார்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட போது கூட தி.நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியதில்லை என குறிப்பிட்ட அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், உரிய திட்டமிடல் இன்றி கால்வாய்களை அகற்றியதும், நடைமேடைகளை உயர்த்தியதுமே, தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.