டெல்லி: 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற வதந்தியால் சிறுவணிகர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர்.
பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கையை மக்களும், வணிகர்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடவில்லை. அதன் பாதிப்பை இன்னும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
ஆனால் அதுபோன்றதொரு அதிர்ச்சி வைத்தியத்துக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது, வரும்21ம் தேதி 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. அதன் எதிரொலியாக சிறிய வியாபார நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கியில் செலுத்த ஆரம்பித்துள்ளன.
இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது போலியான செய்தி என்பது தெரியவந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் இத்தகைய செய்திகயை கசியவிட்டு வருகிறது.
ஆனால் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் கார்க் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பணப்புழக்கத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் நகர்வு பெரிய அளவில் இல்லை. ஆகவே பணப்பரிமாற்றத்தில் 2,000 ரூபாய் நோட்டு என்பது எடுபடவில்லை என்றார்.
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள்கள், எந்த குறுக்கீடும் இன்றி எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறு வணிக நிறுவனங்கள் 2,000 நோட்டுகள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளன.
அதேபோன்று டிச.31ம் தேதி 2019ம் ஆண்டுக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவலும் உண்மையில்லை. அது ஒரு வதந்தி என்றும் தெரியவந்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை.