வாரணாசி

நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம்  தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு வந்திருந்தார்.  அப்போது வாரணாசியில் உள்ள குடிசைவாசிகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.   அத்துடன் அந்த பகுதியில் இருந்த அனைத்து குடிசைகளும் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

விழா முடிந்து பல நாட்கள் ஆன பிறகும் அவர்கள் நடைபாதைகளில் தங்க நேர்ந்தது.   அதன் பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் அங்குக் குடிசை அமைத்துச் சென்ற மாதம் குடி புகுந்தனர்.  இந்த மக்களில் பலர் தலித் வகுப்பையும் மீதமுள்ளோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   பல வருடங்களாக இங்கு வசித்து வரும் இவர்கள் மூங்கில் கூடைகள், பாய்கள், கை விசிறிகள் விற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

சென்ற மாதம் மீண்டும் குடி புகுந்த அவர்களுக்கு இந்த மாதம் மீண்டும் மற்றொரு துயரம் நிகழ்ந்துள்ளது.  பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி அதாவது நாளை வாரணாசிக்கு கார்த்திகை பவுர்ணமிக்காக வருகை தருகிறார். அப்போது அவர் கங்கையில் ஆரத்தி மற்றும் கலை நிகழ்ச்சிகளைக் காண உள்ளார்.  இந்த குடிசை பகுதி அவர் வரும் ஹெலிபேடுக்கு அருகில் உள்ளதால் மீண்டும் குடிசைகள் இடிக்கப்பட்டு அங்கு வசிப்போர் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வாரனாசியில் அமைந்துள்ள 80 காட்டுகளும் அழகாக அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  பல இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.  அதன் பிறகு அவர் சார்நாத் சென்று அங்குப் புத்தரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு ஒலி ஒளி கண்காட்சியை கான உள்ளார்.

குடிசைகள் இடிக்கப்பட்டு விரட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு சமூக சேவகர்களான சௌரப் சிங் மற்றும் ஆதிரா முரளி ஆகியோர் தங்க மற்றும் உள்ள உதவிகளை செய்துள்ளனர்.   தாங்கள் அடிக்கடி விரட்டப்பட்டு தங்க இடம் தேடும் நிலையை அடைந்துள்ளதால் குடிசை வாசிகள் மிகவும் துயரடைந்துள்ளனர்.   இது குறித்து தாஸ் என்னும் குடிசை வாசி இவ்வாறு விரட்டப்படுவது பழகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்

மேலும் முத்தாய்ப்பாக அங்கு குடியிருக்கும் 50 வயது மூதாட்டி ஜீராதேவி, “பிரதமர் ஐயா வருடத்துக்கு எத்தனை முறை எந்தெந்த நேரத்தில் வாரணாசிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.   ஏனென்றால் அவர் வருவதற்குச் சிலகாலம் முன்பாக எங்கள் வீடுகளை நாங்களே இடிக்கவும் அதற்கு சில வாரம் கழித்து நாங்களே கட்டிக் கொள்ளவும் ஏற்பாடுகளை செய்துக் கொள்வோம்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.