‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்..  அதற்காக ஒரு சிறிய குழுவை  அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.. கள்ளப் பணத்தை ஒழித்து, கறுப்புப்பணத்தை வெளியே கொண்டுவரத்தான் இந்த நடவடிக்கை என்றும் அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
கள்ளநோட்டுக்களை வேண்டுமானால் தற்போது ஒழிக்கமுடியுமே, கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க இந்த நடவடிக்கையெல்லாம் போதவே போதாது..
பணம் பதுக்குபவர்களுக்கு பெரிய அளவில் உதவுவது ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்தான். ஆனால் ஆயிரம் ரூபாய்நோட்டுக்களை ஒழிப்பவர்கள், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை எதற்காக புதியதாய் கொண்டு வந்துள்ளனர்? இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை.

நோட்டுக்களை ஒழிக்க பத்து மாதம் ரகசியமாக திட்டங்கள் நடைபெற்று வந்தன என்கிறார் மோடி… எல்லாம் சரி.
புதிய ரிசர்வ் பேங்க் கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 13-ந்தேதிதான். புதிய நோட்டில் அவர் கையெழுத்திட்ட பிறகு, அச்சடிப்பு தொடங்கியிருக்க முடியும்.
ஆக, 17 லட்சம் கோடி ரூபாய் கரண்சி புழங்கும் ஒரு நாட்டில் மிகமிக. குறுகிய காலத்தில்தான் புதிய நோட்டுக்களை அச்சடிக்க இறங்கியிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
2modi
புதிய 500, 1000 ரூபாய் அச்சடிப்பில் அக்கறை காட்டியவர்கள், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நூறு ரூபாயை கணிசமான அளவில் புதியதாய் அச்சடித்திருக்கலாமே.?
நோட்டு ஒழிப்பு அறிவிப்பு வெளியான சில தினங்கள் முன்பே, 100 ரூபாய்களை முழுஅளவில் புழக்கத்தில் விட்டிருந்தால், சில்லரை தட்டுப்பாடை தவிர்த்திருக்கலாமே?
3modi
புதிய நோட்டுக்களை ஏடிஎம்மில் நிரப்ப தொழில் நுட்பம் மாற்றம் செய்யவேண்டும் என்றால், இருக்கும் ஏடிஎம்களில் பாதியை கையில் வைத்துக்கொண்டு 100 ரூபாய்களை நிரப்பும் வசதியின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த பட்ச அளவிலாவது கிடைக்கும்படி செய்திருக்கலாமே?
இரண்டுநாட்கள் அதிகாரபூர்வமாக மூடப்பட்டும், ஏஎடிஎம் இயந்திரங்களில் போதிய அளவில் பணம் நிரப்ப முடிய வில்லை என்றால், தொழில் நுட்ப வளர்சசி அந்த அளவில்தான் இருக்கிறது என்றே அர்த்தம்?
5 நாட்களாகியும் ஏடிஎம்கள் ஷட்டருக்குள் பதுங்கிக்கிடப்பதை பார்த்தால், எந்த நம்பிக்கையில் இப்போதுள்ள ஈ- டெக்னாலஜியை வைத்து புதிய விடியலை விரைவில் கண்டுவிட முடியும் என்று எப்படி நம்புகிறது மத்திய அரசு? ஆக எல்லாமே ரொம்ப ரொம்ப அவசரம்
4-mod
தான் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை தேவையான அளவில் பயன்படுத்த முடியாத நிலையில் குடி மக்களை வைத்துள்ளது மத்திய அரசு.. மாற்றம் என்ற காரணத்திற்காக பொதுமக்களும் பொறுத்துப்போகிறார்கள். ஆனால் அவர்களின் பொறுமை, ஆத்திரமாக மாறாமல் பார்த்துக்கொள்ளாவிட்டால் எதிர்ப்புகளும் விளைவுகளும் கடுமையாக இருக்கும் என்பதே உண்மை..
ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள். விடியலை ஏற்படுத்தத் துடிக்கலாம்..ஆனால் அதற்கு விவேகமும் மிகமிக அவசியம்..
கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்