டில்லி,

பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தற்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவி விரும்பியதால், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அவர்களை பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயார்  பாகிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க சிறை வளாகத்துக்கு சென்றபோது, பெண்களின் இருவரிடமும் இருந்து தாலியை அகற்றியும், குங்குமத்தை அழித்தும்,  செருப்பை கழற்ற சொல்லியும் கெடுபிடிக்கள் செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.

பாக். அரசின் இந்த செயலுக்கு  மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசு இந்திய பெண்களுக்கு செய்த  அவமானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக  செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பக்கா பாகிஸ்தானுக்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இது குறித்து, அவர் தனது ‘டுவிட்டர்’  பக்கத்தில் பதவிட்டுள்ளதில்,  பாகிஸ்தானுக்கு செருப்பு தேவைப்படுகிறது. அதனால்தான், குல்பூஷன் ஜாதவ் மனைவியின் செருப்பை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அதனால், பாகிஸ்தான் துாதருக்கு செருப்பு அனுப்ப ஆன்லைனில் பதிவு செய்துள்ளேன்.

மற்றவர்களும், இதேபோல் பாகிஸ்தானுக்கு செருப்பு அனுப்பி, அதை டுவிட்டரில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.