அத்தியாயம்: 4: பூச்சி வெட்டா?: டாக்டர் த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி., டி.டி.
கடந்த அத்தியாயத்தில் பொடுகு குறித்து விரிவாக பார்த்தோம் அல்லவா? இப்போது பூச்சி வெட்டு குறித்து அறிந்து கொள்வோம்.
தலையிலோ, தாடியிலோ வட்டவட்டமாக திடீரென முடி கொட்டி பதட்டத்தை ஏற்படுத்தும். இதை பூச்சி வெட்டு என்பர். இத ஆங்கிலத்தில் அலோபீசியா ஏர்யேட்டா (alopecia areata) என்பர். அலோபீசியா என்றால் சொட்டை விழுதல் என்று அர்த்தம். ஏரியேட்டா என்றால் சில இடங்களில் கொட்டுதல் என பொருள்.
(சில சமயம் படர் தாமரை காரணமாக குழந்தைகளின் தலையில் வட்ட வட்டமாக முடி கொட்டுவதும் உண்டு.)
அலோபீசியா, ஏர்யேட்டா (பூச்சி வெட்டு) என்பது வித்தியாசமான பிரச்சினைதான்.
நம் உடலில் உள்ள வெள்ளை செல்கள், கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. ஆனால் சில சமயங்களில் இந்த வெள்ளை செல்கள் குழம்பிப்போய், முடிவேரை கிருமி என நினத்து அழித்து விடுகின்றன.
இப்படி, நம் உடலை கிருமிகளிடமிருந்து பாதுகாக் வேண்டிய வெள்ளை செல்கள் குழம்பிபோய் உடலையே தாக்கும் வியாதிகளை, “ஆட்டோ இம்மூன்” வியாதிகள் (autoimmune disease) என்று மருத்துவ மொழியில் கூறுவோம்.
பூச்சு வெட்டும் அப்படிப்பட்ட நோய்தான். இதே போன்றதுதான் தைராய்டு வியாதியும்.
ஆகவே பூச்சிவெட்டு நோயால் தாக்கப்பட்ட வர்கள் தைராய்டு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது போன்ற இரட்டைத் தாக்குதல் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றன.
பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல இந்த பூச்சிவெட்டு, பூச்சிகள் கடித்து வருவது இல்லை.
பூச்சுவெட்டு பொதுவாக வட்ட வட்ட சொட்டையாக ஏற்படும். எப்போதாவது நிறைய முடி கொட்டும். முழுச் சொட்டையும் விழலாம். ஆனால் இப்படி முழுவதுமாக முடி கொட்டி சொட்டை விழும் வாய்ப்பு குறைவே.
பொதுவாக 30 சதவீதம் பேருக்கு 6மாத காலத்தில் தானாகவே முடிவளர வாய்ப்பு உள்ளது.
சிகிச்சை
குழந்தைகளுக்கு மேலே தடவும் மருந்து மூலமாக குணப்படுத்தலாம்.
பெரியவர்களுக்கு முடி கொட்டிய இடத்தில் ஊசி போட்டு குணப்படுத்தலாம். ஊசியின் விலை மிகவும் குறைவே. ஊசி மாதம் தலா ஒரு முறை 3 தடவை போட வேண்டி வரலாம்.
பூச்சி வெட்டுக்கு சிகிச்சை அளிப்பதாக பலரும் விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் தகுதியான மருத்துவர்தானா என்பதை அறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் தலை முடி சிகிச்சைக்காக போய், தலையை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.
அடுத்த அத்தியாயத்தில் படர் தாமரை குறித்து அறிவோம்.
(தொடரும்…)