நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும் விமானியும் அடங்குவதாக மேயர் கூறினார்.

விபத்து தொடர்பான காணொளியில் ஒரு பெரிய பொருள் ஆற்றில் விழுவது தெரிந்தது. சில வினாடிகள் கழித்து, ஹெலிகாப்டரின் இறக்கை தோன்றியது. பின்னர், அவசரகால மேலாண்மை மற்றும் போலீஸ் படகுகள் ஹெலிகாப்டருக்கு அருகில் வந்து நடவடிக்கைகளைத் தொடங்கின.

நியூயார்க்கில் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெல் 206 ஹெலிகாப்டர், பிற்பகல் 3 மணியளவில் நகர மைய ஹெலிபேடில் இருந்து புறப்பட்டது. மேலும் ஹட்சன் ஆற்றின் மீது வடக்கு நோக்கி பறந்ததாக நியூயார்க் போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் கூறினார்.

பின்னர், ஹெலிகாப்டர் தெற்கு நோக்கித் திரும்பி ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை நெருங்கியபோது விபத்துக்குள்ளானது. நியூ ஜெர்சியின் ஹோபோக்கனுக்கு சற்று தொலைவில், பிற்பகல் 3:15 மணியளவில் லோயர் மன்ஹாட்டனுக்கு அருகில் மூழ்கியதாக டிஷ் கூறினார்.

விமானி, இரண்டு பேர் மற்றும் மூன்று குழந்தைகளை மீட்டெடுப்பதில் டைவர்ஸ் வெற்றி பெற்றனர். அதற்குள், நான்கு பேர் இறந்துவிட்டனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் இறந்தனர்.

மன்ஹாட்டனைச் சுற்றியுள்ள வான்வெளி ஹெலிகாப்டர்களால் நிரம்பியுள்ளது, இது சுற்றுலாப் பயணிகளுக்கு நதி மற்றும் சுற்றியுள்ள பகுதியின் பறவைக் காட்சியை வானிலிருந்து பார்க்க உதவுகிறது.

இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தும்.