டில்லி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க லூஃப்தன்சா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இந்நிலையில் இம்மாதம் முதல் தேதி அளிக்க வேண்டிய மார்ச் மாத ஊதியமும் தாமதமாக வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக செலவுகளுக்கு பணம் இல்லாததால் தற்போது இந்த நிறுவனம் தனது சேவைகளை குறைத்துள்ளது.

நிறுவனம் அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ.8000 கோடிக்கு மேல் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் ஸ்டேட் வங்கி கடன் அளித்துள்ளது. கடந்த மாதம் இந்த நிறுவன முக்கிய பங்குதாரர் மற்றும் தலைவர் பதவி வகித்திருந்த நரேஷ் கோயல் ஸ்டேட் வங்கி உத்தரவுக்கிணங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நிறுவனத்தின் வெளிநாட்டு பங்குதாரரான எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு விற்க விரும்புவதாக தெரிவித்தது. இந்த விமான நிறுவனத்தை வாங்க ஆறு வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அவை டிபிஜி கேபிடல், பிளாக்ஸ்டோன், லூஃப்தன்ஸா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் ஃபிரான்ஸ் கேஎல்எம் மற்றும் கேகே ஆர் ஆகிய நிறுவனங்கள் என கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் ஸ்டேட் வங்கி யின் தலைமையில் உள்ள கடன் அளித்தோரிடம் தங்கள் ஆர்வத்தை தெரிவித்துள்ளன.

தற்போதுள்ள நிலையில் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் எதிஹாட் ஏர்லைன்ஸ் ஆகியோரிடம் அதிக அளவில் பங்குகள் உள்ளன. அவர்கள் தங்கள் பங்குகளை இந்த நிறுவனங்களுக்கு விற்க இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆயினும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி ஸ்டேட் வங்கி இந்த பங்குகளை விற்க தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.