சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து சேவைகள் சுமார் ஆறரை மாதங்களுக்கு பிறகு, இன்று தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள், பயணம் செய்வார்களா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் முதல் பேருந்து சேவைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 சதவிகிதம்  அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஆம்னி பேருந்துகளும் அக்டோபர் 1ந்தேதி முதல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், வரி பிரச்சினை காரணமாக, பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.   ஊரடங்கு கால சாலை வரியை ரத்து செய்தால்தான் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் சேவை இயக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 30ம் தேதிவரையிலான சாலை வரியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளில், முதல்கட்டமாக  500 பேருந்துகள் இன்று (அக்டோபர் 16ந்தேதி முதல் ) சேவை தொடங்குகின்றன. பயணிகள் வருகையைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பயணிகள் கட்டணம் என்ன என்பது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.