சென்னை: முன்னாள் துணைமுதல்வரான ஓபிஎஸ் மகன் ஓபி ரவிந்திரநாத்மீது, சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடநாடு வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ், தனது புதிய கூட்டாளியான டிடிவி தினகரன் உடன் இணைந்து, போராட்டம் நடத்தி வரும் வேளையில், அவரது மகனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்மீது இளம்பெண் காயத்ரி தேவி பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயத்ரி தேவி, நேற்று சென்னை வருகை தந்து, காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவாலை சந்தித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது,   தனது பெயர் சிவகங்கை காயத்ரி தேவி  என்றவர்,  தனது குடும்பமும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குடும்பமும், கடந்த  பத்தாண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக பழகி வருகிறோம். ஓ பி ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி என்னுடைய தோழி அவரின் மூலமாக தான் ஓ பி ரவீந்திரநாத் குடும்பத்தோடு நட்பு ஏற்பட்டது. ஒ பி ரவீந்திரநாத்தை எனக்கு உடன்பிறவா சகோதரனாக எண்ணி நட்பாக பழகி வந்தோம் என்றவர்,  ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ( இயக்குனர் பாலாவின் மனைவி) ஓ பி ரவீந்திரநாத்துக்கு தகாத உறவு இருந்தது, இயக்குனர் பாலாவனுடன் மலருக்கு விவாகரத்தும் ஆன நிலையில் எங்கள் நட்பு வட்டாரத்தில் பலருக்கும் இது மனக்கசப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனக்கு விவாகரத்தானது. அதன்பிறகு,  8 மாதங்களுக்கு முன்பாக ஓபி ரவீந்திரநாத்தின் நண்பர் என கூறிக் கொண்டு ஒரு நபர் என்னை தொடர்பு கொண்டு ஒ பி ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும் அவருடன் பேசுங்கள் என்றும் கூறினார், அதுவும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து இந்த அழைப்பு வந்தது அதிர்ச்சி அளித்தது.

இந்த விவகாரத்தை ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடமும் கூறியிருந்தேன்.  அதனால் சிலகாலம் போன் ஏதும் வராமல் இருந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி மீண்டும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அரை மணி நேரம் நன்றாக பேசிய ஓ பி ரவீந்திரநாத் ஒரு கட்டத்திற்கு மேல் ஆபாசமாக பேசத் தொடங்கினார். இதனால்,  பொறுமை இழந்த நான் நீங்கள் பேசுவது நல்லா இருக்கிறதா நான் உங்களை அண்ணனாக பார்க்கிறேன் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேட்டேன். ஆனால், அவரை அதை ஏற்க மறுத்து,  சும்மா இப்படி எல்லாம் சொல்லாதே மலர் மாதிரி உன்னையும் நன்றாக வைத்து ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன் , வேண்டுமானால் கல்யாணம் கூட செய்து கொள்கிறேன் என்றெல்லாம் கூறினார் என்று குற்றம் சாட்டியவர்,

ஆண்கள் குடித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறதா குடித்தால் தாய்க்கும் தங்கைக்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதா. இதே போல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஒரு எம்பி வீட்டின் பெண்ணிடம் பேச முடியுமா அப்படி பேசினால் சும்மா விடுவார்களா.? இவ்வாறு பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பினேன், அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆனால் அவர் நண்பர்கள் இடத்தில் இருந்து மிரட்டல்கள் மட்டும் தொடர்ந்து வருகிறது.

இன்று எனக்கு நடப்பது நாளை என் மகளுக்கு நடக்கலாம், இதனால் இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் பயப்படுவதாக இல்லை இதை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளேன்.   இதுகுறித்து கடந்த நவம்பர் (2021)  மாதத்திலேயே ஓபிஎஸ் இடமும் கூறினேன் என்றார்.  ஆனால், அவரோட, ஒ பி ரவீந்திரநாத் தனது அம்மாவின் திதிக்கு கூட வரவில்லை இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவரிடம் நான் என்ன சொல்வது என்று கூறினார்.

தனது குற்றச்சாட்டு குறித்து சென்னை வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துள்ளதாக  கூறியவர், இதுதொடர்பாக. ஏற்கனவே  கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், ஆனால்  இதுவரை நடவடிக்கையும் எடுக்காததால் இன்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க வந்தேன்,  இன்று டிஜிபி சந்திக்க முடியவில்லை, நாளை வருமாறு தெரிவித்து உள்ளனர். ஓபி.ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராக அளிக்க உள்ளேன்” அதனால், நாளை (இன்று)  காலை 10 மணிக்கு வருமாறு கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு கூறினார்.