கேளம்பாக்கம்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யுங்கள் என தமிழகஅரசுக்கு குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரை செய்துள்ளது.

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் தமிழகஅரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சிவசங்கர் பாபாவை டெல்லியில் இன்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், கூறியிருப்பதாவது,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா , அந்தப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் பாலியல் புகாருக்குள்ளான சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கின் தன்மையைக் கருதி தற்பொழுது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்தச் சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிப்பினை தொடர விருப்பமில்லாமல், மாற்று சான்றிதழை பெற்று வேறு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி இந்தப் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்திட கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இந்தப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்பட்டு, பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பள்ளி நிர்வாகம் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பள்ளிக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து , பள்ளியினை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.