மிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில உள்ள கும்பகோணம் என்ற ஊரின் அருகில் இருக்கும் பிலாவடி எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளாள் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மன்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது இந்த ஆலயம். முடிகொண்டான் ஆற்றங்கரையில் தென் பகுதியில் உள்ள அற்புதமான சோலை ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மனும் பராசக்தியின் ஒரு அம்சமே. ஆதனாலோ என்னவோ இந்த ஆலயத்தை காத்தாயி அம்மன் என்றும், காத்யாயினி அம்மன் என்றும் பலரும் நினைத்து வருகின்றனர். இந்த ஆலயம் வள்ளி என்ற காத்தாயி அம்மனின் ஆலயமே.

தஞ்சை ஸரஸ்வதி மகாலில் உள்ள ஆவணங்கள் மூலமும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி ஆலயத்திலும் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலமும், கி.பி 1577 ஆம் ஆண்டில் தஞ்சை நாயக்க மன்னனாக இருந்த செவ்வப்ப நாயக்கர் என்பவர் இந்த ஆலயம் அமைந்துள்ள ஆவணம், சித்தாடி என்ற கிராமத்தை துறவி ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து இருந்தார் எனத் தெரிய வருகின்றது.

அங்கு எப்படி வள்ளி, காத்தாயி என்ற பெயரில் எழுந்தருளினாள்? அந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. தேவலோகத்தில் திருமால் ஒரு முறை அனைவரோடும் அமர்ந்தபடி மிகவும் மகிழ்சியாக பேசிக் கொண்டு இருந்த பொழுது பேச்சின் இடையே அவர் ஆனந்தக் கண்ணீர் விட, கன்னத்தில் இருந்து வழிந்து விழுந்த அந்த நீர்த் திவலைகளில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். முதலில் பிறந்த பெண் அமுதவல்லி எனவும், இரண்டாவதாகப் பிறந்தவள் சுந்தரவல்லி என்ற பெயர்களையும் பெற்றனர். வளர்ந்து பெரியவர்களான இருவரும் ஒன்றாகவே பிறந்து விட்டதினால், என்றும் ஒன்றாகவே தாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருவருக்கும் ஒரே கணவனாக முருகப் பெருமானே அமைய வேண்டும் என விரும்பினர்.

அவரை இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, தர்பைப் புற்களால் சூழப்பட்டு இருந்த சரவணப் பொய்கை நதிக் கரைக்குச் சென்று அங்கே அமர்ந்தபடி கடும் தவம் செய்யலாயினர். அதனால் மனம் மகிழ்ந்துப் போன முருகப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி தான் சூரனைக் கொல்வதற்காக அவதரித்து உள்ளதால், அந்த நேரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்திகளின் அவதாரங்களாகப் பிறந்து உள்ள அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், சூரனை வதம் செய்த பின் தானே வந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குத் தந்த பின், தான் திரும்பி வரும்வரை மூத்தவள் தேவலோகத்திலும், இளையவள் பூவுலகிலும் சென்று தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினார்.

முதலில் குங்குமம், பிறகு மண் பொம்மை, கடைசியாக சிலை வடிவங்களில் அவதரித்தவள் ஞானாம்பிகையாக, ஒட்டியாண ருபிணியாக, கருணாமூர்த்தியாக மூன்று குணங்களும் கொண்டு, அதை பிரதிபலிக்கும் வகையில் கொண்டையில் மூன்று சுற்றுக்களும் கொண்டு அங்கு வந்து நின்றhள். முதலும், நடுவும், முடிவுமாக அனைத்தும் அவளே என அவனாகி, அவளாகி அனைத்துமாகி ஆகி நின்றாள் அந்த அன்னை. மறுநாள் தனக்கு பூஜைகளை செய்ய வந்தவரிடம் தான் நம்பிராஜனிடம் வளர்ந்ததினால் நம்பினோர்களை கை விடாமலும், பரண் மீதேறி பறவைகளிடம் இருந்து தினைகளை காத்ததினால் மக்களுடைய ஆசாபாசங்களை துரத்துவேன் என்றும் தன்னை மணமுடித்த பொழுது வந்திருந்த முருகப் பெருமானின் பெற்றோர்களான பார்வதி, சிவன் மற்றும, தன் மெய்காப்பாளனாக இருந்த வீரன், அவர்களுடன் வந்திருந்த ஜடா முனி, நாரதர், அகஸ்தியர், மற்றும் சப்த ரிஷிகளான குகை முனி வஷிஷ்டர், வேத முனி வாமதேவர், வாழு முனி விஸ்வாமித்திரர், பூ முனி கௌதமர், முத்து முனி அத்தரி, கரு முனி பிருகு, செம் முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள்.

அந்த காத்தாயி ஆலயத்தில் இன்னொரு சன்னதியில் இருப்பவளே முருகப் பெருமானின் தாயாரான பார்வதி என்ற பச்சை வாழி அம்மன்(காத்யாயினி). அவள் அங்கு பச்சை வழி அம்மன் என்ற பெயரில் அமர்ந்து உள்ளாள். முன்னொரு காலத்தில் மகா தவச்சீலரான காத்யாயன மகரிஷி சிவபெருமானை நி]னத்தபடி தவம் இருந்தார். அவர் வேண்டுகோள் என்ன என்றால் பார்வதி தேவி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அவளை பரமேஸ்வரனுக்கு தானே கன்னிகா தானம் செய்து கொடுக்க வேண்டும். மிக வேடிக்கையான வேண்டுகோளாக இருந்தாலும் அவருடையத் தவவலிமையை மெச்சிய சிவபெருமானும் அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவருக்கு பார்வதியை மகளாகப் பிறக்க வைத்தார். பிறந்த பெண் குழந்தைக்கு காத்யாயினி எனப் பெயர் சூட்டி பெருமையுடன் வளர்த்து வந்தார் காத்யாயன மகரிஷி. வயதிற்கு வந்த காத்யாயினியும் சிவனை எண்ணியபடி தவம் இருக்கத் துவங்கினாள். காத்யாயன மகரிஷியின் நண்பர்களான சிவ முனீஸ்வரர், தர்ம முனீஸ்வரர், வாழ் முனீஸ்வரர், புருட முனீஸ்வரர், நாத முனீஸ்வரர், யோக முனீஸ்வரர், மற்றும் மகா முனீஸ்வரர் என்ற ஏழு முனிவர்களும் காத்யாயினிக்கு உபதேசங்கள் புரிந்து அவள் தவம் வெற்றி பெற துணை நின்றனர்.