மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை அதிகாரிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிலிகுரி உயிரியல் பூங்காவில் ஒரே இடத்தில் அடைக்கப்பட்ட 7 வயது ஆண் மற்றும் 5 வயது பெண் சிங்கங்களுக்கு “அக்பர்” “சீதா” என்று முறையே பெயரிடப்பட்டது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்ததை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன் இன்று விசாரணைக்கு வந்தது.
விஷ்வ இந்து பரிஷத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிங்கம் இந்து கடவுளான துர்கா உடன் தொடர்புடையது. நவராத்திரியின் போது சிங்கத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வணங்குவது இந்துக்களின் வழக்கம்.
அதேபோல் ராமரின் மனைவி சீதாவையும் மக்கள் வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கத்திற்கு சீதா என்று பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
இன்று இதனை ஏற்றுக்கொண்டால் நாளை ஒரு கழுதைக்கு கடவுளின் பெயரை வைப்பார்கள் பிறகு வெவ்வேறு விலங்குகளுக்கு இதேபோல் கடவுள் பெயரை வைத்து கேலி செய்வார்கள் இதை அனுமதிக்க கூடாது.
இந்த சிங்கங்களுக்கு பெயர் வைத்தது திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யான தகவல் அதனால் இதுகுறித்து விசாரித்து இனி கடவுள் பெயரை எந்தவொரு விலங்கிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் தன்மையைக் கருதி இதனை பொதுநல வழக்காக விசாரிக்க உள்ளதாக தெரிவித்த நிலையில் வழக்கின் அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.