சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி  காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான  ராகுல்காந்தி  டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026)  தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியை மேற்கொணடு வருகிறது. இந்த பணிகளை  திமுக உள்பட இண்டியா  கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  இந்த பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக  பல  கட்சிகள் புகார் கூறி வருகின்றன.  ஆனால், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளாமல் பணிகளை மேறகொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணியாளர்களுக்கு  உதவுவதற்காக அரசியல் கட்சியினரும்  பணியாற்றி வருகின்றனர்.    இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ச ட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு சிறப்பு திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா பவனில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட  12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், சூரஜ்ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆலோசனை  கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லி மேலிடம் அமைத்துள்ள 38 பேர் கொண்ட குழுவுடனும் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 38 பேரையும் டெல்லிக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இந்த ஆலோசனையின்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியை தொடர்வது மேலும் அதிக இடங்களை கேட்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.  மேலும் தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. இதற்காக  மாநில காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இன்றே டெல்லிக்கு செல்லதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.