கந்தமால், ஒரிசா
ஒரிசாவை சேர்ந்த ஒருவர் தமது குழந்தைகள் பள்ளி செல்வதற்காக மலையை உடைத்து சாலை ஒன்றை அமைத்து வருகிறார்.
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையை சார்ந்த கிராமமான கும்சாகியில் வசிப்பவர் ஜலந்தர் நாயக். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவருடைய குடும்பத்தினர் மட்டுமே அந்தக் கிராமத்தில் வசித்து வருகிறனர். மிச்சமுள்ள அனைவரும் அங்கு வாழ்க்கை நடத்த வசதிகள் இல்லாததால் கிராமத்தை விட்டு சென்று விட்டனர். சொந்த ஊரை விட்டுச் செல்ல மனமில்லாத நாயக் மட்டும் அங்கு வசித்து வருகிறார்.
பக்கத்தில் உள்ள புல்பனி நகரத்தில் இவருடைய குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் மலையைச் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால் துன்புறும் தன் குழந்தைகளுக்காக நாயக் மலையின் நடுவே ஒரு சாலை அமைக்கத் துவங்கினார். தன்னால் கல்வி கற்க இயலாமல் போனதால் தன் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் இதை நாயக் செய்து வருகிறார். வேறு யாரும் அந்த கிராமத்தில் இல்லாததால் தனி ஒருவராக இந்த பணியை செய்து வருகிறார்.
அந்தப் பகுதி மேம்பாட்டு அதிகாரி ஜெனா, “இந்தப் பகுதி வாழ்க்கை நடத்த வசதி இல்லாததால் அவர்களை வேறு இடத்துக்கு குடி பெயறுமாறு அரசு கூறியது. ஆனால் தனது சொந்த ஊரை விட்டு வர நாயக் மறுத்து விட்டார். அவருக்கு எல்லா உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.