ஸ்ரீநகர்

தேசிய கீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  அந்த சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் தினமும் காலை இந்திய தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றறிக்கையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய 16 நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு அசெம்பிளி கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், இது மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்க உணர்வை கொண்டு வர உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை அழைத்து சுற்றுச்சூழல், போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.