சென்னை: பிரபல கர்நாடக இசைக்கலைஞரான மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருதை, அவரை விமர்சனம் செய்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என மியூசிக் அகாடமி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.
கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி கடந்த 2004ம் ஆண்டு மறைந்தார். அவரை போற்றும் வகையில், பிரபல நாளிதழான தி இந்து நாளிதழ் மற்றும் மியூசிக் அகாடமி இணைந்து, சென்னையில் உள்ள சங்கீத அகாடமி, பிரபல பாடகர்களை தேர்வு செய்து, சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த விருதை 2005ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பு 2024ம் ஆண்டில் வரும் டிசம்பரில் 98-வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படும் என மியூசிங் அகாடமி அறிவித்தது. இதற்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரிலான விருதை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பாடகர்.டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருது வழங்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இறை நம்பிக்கை கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை அற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவிற்கு மியூசிக் அகாடமி, தி இந்து குழுமம் ஆகியவை தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மேற்கண்ட மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என மியூசிக் அகாடமிக்கு தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு, சுப்புலட்சுமி பற்றிய டிஜேஎஸ் ஜார்ஜின் புத்தகத்தின் பிரபல தெலுங்கு எழுத்தாளர் வோல்காவின் தெலுங்கு மொழிபெயர்ப்பை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய இசையமைப்பாளர் டி.எம்.கிருஷ்ணா, கர்னாடக இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரவலான அங்கீகாரத்தைப் பெறுவதற்காகத் தனது தேவதாசி பூர்வீகத்திலிருந்து விலகியதாக கூறினார் இது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
அதாவது, பிரபல பாடகரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா , 2017, நவம்பர் 24 அன்று ஹைதராபாத்தில் நடந்த ஒரு உரையின் போது, இசைப் பேரறிஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி பேசிய கிருஷ்ணா, சுப்புலட்சுமி தனது தேவதாசி வேர்கள் மற்றும் அடையாளத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு கலாச்சார ரீதியாக வேறொருவரான ஒரு சிறந்த பிராமணப் பெண்ணாக மாறுவதன் மூலம் பரந்த சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று கூறினார். இது ஒரு சோகம், என்றார்.
“எம்.எஸ்ஸின் குரல் ஒரு இருண்ட, உயர்சாதி அல்லாத அழகுப் பெண்மணியிடமிருந்து வந்திருந்தால், நாம் அனைவரும் இன்று போல அவளைக் கொண்டாடு வோம்?” என்று என கேள்வி எழுபிபியவர், “அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நாம் அனைவரும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சுப்புலக்ஷ்மியின் இசையின் தொடக்கத்தில், “ஆன்மாவில் நம்ப முடியாத சுதந்திரம்” இருந்தது, என விமர்சித்தவர், , ஆனால் பின்னர், அது ஒரு குறிப்பிட்ட சோகத்தால் மயக்கமடைந்தது. “அவளுடைய துக்கத்தின் காரணமாக அவளது இசை இருந்தது,” என்றார்.
கிருஷ்ணாவின் பேச்சு கடுமையான கண்டனங்களை எதிர்கொண்ட நிலையில், மியூசிக் அகாடமி அவருக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான விருதை அறிவித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு விருது வழங்க நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.