சிங்கப்பூர் அரசு, மேலும் 8 வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் (SMC) இணைந்து ஜனவரி 27 அன்று அறிக்கை வெளியிட்டன.

முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டில் மருத்துவர்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த தேவையை சமாளிக்கவே இந்த புதிய கல்லூரிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 112-லிருந்து 120-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்:
- ஆஸ்திரேலியா – அடிலெய்ட் பல்கலைக்கழகம்
- இந்தியா – மணிப்பால் உயர் கல்வி அகாடமி
- அயர்லாந்து – கால்வே பல்கலைக்கழகம்
- மலேசியா – யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா
- பாகிஸ்தான் – ஆகா கான் மருத்துவக் கல்லூரி
- சீனா – சிங்ஹுவா பல்கலைக்கழகம்
- இங்கிலாந்து – எக்சிட்டர் பல்கலைக்கழகம்
- இங்கிலாந்து – சிட்டி, செயிண்ட் ஜார்ஜஸ் – லண்டன் பல்கலைக்கழகம்
2026 முதல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கல்லூரிகளில் சேர முடியும்.
மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது,
- கல்லூரிகளின் சர்வதேச தரவரிசை
- பாடம் நடத்தப்படும் மொழி (ஆங்கிலம்)
- அந்த கல்லூரிகளில் படித்த மருத்துவர்களின் செயல்திறன் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2014-ல் 440 ஆக இருந்த உள்ளூர் மருத்துவ மாணவர் சேர்க்கை, 2025-ல் 555 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் – 2026-க்கு முன் அல்லது பின் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் – சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து அங்கு மருத்துவப் பணியில் ஈடுபடலாம்.
ஆனால், வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் ஆரம்ப காலங்களில் மேற்பார்வை முறையின் கீழ் பணியாற்ற வேண்டியிருக்கும் என்றும், இதன் மூலம் மருத்துவ சேவையின் தரம் உறுதி செய்யப்படும் என்றும் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]