நேற்று சிங்கப்பூரில், “தேசிய பேரணி 2016”  என்ற நிகழ்ச்சியில்  பேசிக் கொண்டிருந்த அந்தநாட்டு பிரதமர் லீ ஹூசைன் லூங், திடீரென மயங்கி விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டன.
அந்த நிகழ்ச்சியின் நேரலையும் இடையில் நிறுத்தப்பட்டது.
அடுத்து,  பிரதமர், மருத்துவக் கண்காப்பில்  இருக்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதே நேரம், சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் எந்தவொரு ஊடகத்திலும் இது குறித்து செய்தி வெளியாகவில்லை. நம் ஊரைப்போல, “சற்றுமுன்.. ஃபாளாஷ் செய்தி” என்று அதிரவைக்கும் பின்னணி இசையுடன் “மேடையில் இருந்து பிரதமர் விழுந்தார்.. பிரதமர் கவலைக்கிடம்” என்றெல்லாம் செய்தி வெளியிட்டு அதிரவைக்கவில்லை.
அதே போல  இன்னொரு விசயம்…
பிரதமர் பேசிய  அரங்கில் கூடியிருந்தவர்கள் எந்தவொரு கூச்சல் குழப்பமின்றி அமைதியாக காத்திருந்தனர்.
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது.
மருத்துவ முதலுதவிக்குப் பிறகு சிறிது நேர ஓய்வெடுத்து மீண்டும் அதே மேடையில் ஏறினார் பிரதமர் லீ ஹீசைன் லூங்.
தனது  வருகைக்காக காத்திருந்த மக்களுக்காக நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடர்ந்தார்.
0
அதே மாறாப் புன்னகையுடன், “நீங்கள்  எல்லோரும் காத்திருப்பீர்கள்  என்பதால்  எனது பேச்சினைத் தொடர வந்துள்ளேன். இந்த நிகழ்வு நிறைவடைந்த  பிறகு எனது மருத்துவரிடம் சென்று  முழு உடல் பரிசோதனை செய்துகொள்வேன்” என்றார்.
மேலும், “சிங்கப்பூர் என்பது மலாயர்களின் தேசமோ..  சீனர்களின் தேசமோ…  இந்தியர்களின் தேசமோ அல்ல.  ஆனால், இங்கிருக்கக் கூடிய அந்தந்த வம்சாவளியினர் இந்த தேசத்தை நிர்வகிக்கக்கூடிய திறனும் ஆற்றலும் கொண்டவர்களாக இருந்தால், அவர்களைத்தான்  சிங்கப்பூர் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த தேசம் மொழி, இனம், நிறம் போன்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டை திறம்பட நிர்வகிக்கக்கூடிய,  தொலை நோக்குள்ள தலைவரை நாம் வெகு சீக்கிரம் அடையாளம் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.   அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின் எனது பதவி பொறுப்புகளை அவரிடம் நான் ஒப்படைக்க வேண்டும். அதைப் பற்றி பேசவேண்டிய சரியான தருணமும் இதுதான்!” என்றார் பிரதமர் லீ.
நல்ல தலைவர், நல்ல மக்கள்.. நல்ல நாடு!