சிங்கப்பூர், சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம்..!!
மகாவிஷ்ணு உலகை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்தார். திருமால் மேற்கொண்ட பத்து அவதாரங்களில் ஸ்ரீராமச்சந்திரன் என்னும் பெயருடன் அயோத்/தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாக அவதரித்தார். மனிதர்கள் இப்படித் தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ராமரின் அவதாரம் இன்றளவும் திகழ்கின்றது.
ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள்.
சிங்கப்பூர் மாநகரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி என்னும் நகரம். இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது.
இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1945-ம் ஆண்டு பிரத்யேகமாக ஒரு இடத்தை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்று அங்கு ராமர் ஆலயத்தை நிறுவினார். ஆலயம் அமைப்பதற்கு வேண்டிய ஆள் பலத்தையும் கட்டுமான தளவாடத்தையும் பிரிட்டிஷ் ஆயுத படையிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் ஆதரவையும் பெற்று இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. ராம் நாயுடுவுக்கு பின்னர் இந்த பகுதியில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
நாகரீகத்தை முன்னிட்டு எத்தனையோ விடயங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருந்தாலும், காலம் காலமாய் எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் நிலைத்திருப்பது முன்னோர்களின் கருத்துக்களும், நன்னெறிகளைப் போற்றும் இதிகாசங்களும், மனிதருக்கு ஆத்ம சாந்தி அளித்திடும் தெய்வ வழிபாடுகளுமேயாகும்.
சாங்கியின் ராமர் ஆலயத்தை மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து ஆலய சாஸ்த்திரத்தையும் கட்டிடக்கலை நிபுணத்துவத்தையும் பெற்றிருந்த மூவரை சாங்கி வரவழைத்து ஆலய பணிகளை தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரை நோக்கி கிழக்கு முகமாக இருப்பது இந்திய ஆலய அமைப்பிற்கு முக்கிய சிறப்பாக கருதப்படுகின்றது.
இது வைணவ கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வந்து வழிபட வேண்டும் என்ற பரந்த நோக்கில் அமைந்திருப்பது இவ்வாலயம்.
கடற்கரைக்கு மிக அருகாமையிலே அமைந்திருப்பதால், ஈமச் சடங்குக்கு பிறகு சிவாலய சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், இந்த ஆலயத்தை புதிய சாலை ஒன்றிற்கு பெயர்ச்சி செய்து விடலாம் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது.
ஆனால் அப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சியோசொங்தி அவர்களின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டு இந்த ஆலயம் அரசாங்கத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
நகர சீரமைப்பை முன்னிட்டு சிங்கப்பூரின் மற்ற பகுதிகள் அமைந்திருந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மூன்று சிறு கோயில்கள் ஒன்றிணைக்கப்பட்டு வழிபாட்டு தலமாக அமைக்கப் பெற அரசாங்கம் யோசனை ஒன்றினை முன் வைத்தது.
அதன்படி கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர், புக்கிட்தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம் ஆகியவற்றை சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்துடன் இணைத்து ஒரே ஆலயமாக ஆக்கப்பட்டது.
2004-ம் ஆண்டு பிப்ரவர் மாதத்தில் ஆலய நிர்வாகம் 21 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை தமிழ்நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் சிலையாய் வடித்து 2005-ம் ஆண்டு ஸ்தாபித்தது.
பின் வந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. பாசி ரிஸ், சிமேஸ், ஈஸ்ட்கோஸ்ட் பகுதிகளில் குடியிருப்பு காலனிகள் தோன்ற தொடங்கியதால் அங்குள்ள மக்களும் வழிபாட்டிற்காக ராமர் ஆலயத்தை நோக்கி வந்தனர்.
அதற்கேற்ப சமய நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடத்தப்பட்டு மக்களின் ஆன்மீக தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பல இனத்து மக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்ததன் காரணமாக இந்து ஆலயங்களில் புத்தர் பெருமானின் சிலையும் இடம் பெற்றது. புத்தரின் போதனைகள் இந்திய மக்களையும் பெரிதும் கவர்ந்ததால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு.
புத்தர் பிரான் நமது இந்திய தெய்வ அவதாரங்களில் ஒன்று தான் என்று கருதும் இந்துக்களும் உண்டு. புத்தபிரானின் அருளையும் மக்கள் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் புத்தரின் திருவுருவமும் சாங்கி ராமர் ஆலயத்தில் இடம் பெற்றது.
மற்றுமொரு சமய நல்லிணக்கமாக சாங்கி ராமர் ஆலயத்தில் குவான்யின் என்னும் சீன தேவதைக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. புத்த பாரம்பரியத்திலிருந்து கருணை தெய்வமாக குவான்யின் போற்றப்படுகின்றது.
*சீனா, வியட்நாம், ஜப்பான், பாலி ஆகிய நாடுகளில் இந்த கருணை தெய்வம் பல பெயர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. பல பெயர்கள் பெற்றிருந்தாலும் கருணை, அன்பு, பரிவு ஆகியவற்றின் இருப்பிடமாக சொல்லப்படுகின்றது.
சிறப்பு மிக்க சாங்கியின் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடிப் பெருக்கு திருவிழா, திருவிளக்கு பூஜை, சண்டி ஹோமங்கள் போன்ற விழாக்களும் சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம் ஆகிய சமய வைபவங்களும் மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர் கிழக்கு பகுதியில் வாழுகின்ற தமிழ் பெருமக்கள் மற்றும் சிங்கப்பூர் வாசிகளின் ஆன்மீக தேவைகளை சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயம் நல்ல முறையில் பூர்த்தி செய்து வருகின்றது.