டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.3,194 கோடி முதலீடு செய்யவுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது.

இதையடுத்து 2022 நவம்பர் மாதம் எஸ்.ஐ.ஏ. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்.ஐ.ஏ.-வுக்கு 25.1 சதவீத பங்குகளை வழங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது.

ஏற்கனவே, விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ. – SIA) நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகளும் இருந்தது.

விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் தீர்மானித்ததை அடுத்து SIA-வுக்கு 25.1 சதவீத பங்குகளை வழங்க முடிவெடுத்தது.

2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தீர்மானித்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் ரூ. 7,000 கோடி முதலீடு செய்ய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா இணைப்பு முழுமையடைந்ததை அடுத்து முதல்கட்டமாக ரூ. 2,059 கோடி முதலீடு செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது மேலும் ரூ.3,194 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா விமான சேவையின் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு