இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அந்த வரிசையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் :
“எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது. இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.
இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.
லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும்.
நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்” என அறிவித்துள்ளார் .