ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், கட்டாக் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த போலித் தொலைபேசி இணைப்பகத்தை ஒடிசா மாநில சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ராஜு மோண்டல் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷை சேர்ந்த அசதுர் ஜமானுடன் சேர்ந்து ராஜு மோண்டல் என்ற நபர் இந்த போலி கால் சென்டர்களை நடத்தி வந்ததாக புவனேஷ்வர் நகர ஆணையர் தெரிவித்துள்ளார்.

அசதுர் ஜமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புவனேஷ்வர் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து சிம் பாக்ஸ் செட்டப் மூலம் ராஜு மோண்டல் இதனை செயல்படுத்தி வந்துள்ளார்.

இது தவிர, அசதுர் ஜமான் துணையில்லாமல் கட்டாக் நகரில் ராஜு மோண்டல் தனியாக ஒரு சிம் பாக்ஸ் செட்டப் கால் சென்டர் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

சிம் பாக்ஸ் செட்டப்பிற்குத் தேவையான கருவிகளை மேற்கு வங்கத்தில் இருந்து வாங்கியதாக கூறியுள்ள ராஜு மோண்டலிடம் இருந்து நூற்றுக்கணக்கான சிம்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களின் மூன்று நகரங்களில் இயங்கி வந்த இந்த சிம் பாக்ஸ் கால் சென்டர்களில் இருந்து 17 சிம் பாக்ஸ்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள 678 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கால் சென்டர்களின் சேவையை பயன்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய அதிகாரிகள் இதில் தீவிரவாத செயலுக்கு பங்கு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

2023 அக்டோபர் மாதம் இந்தியா வந்த அசதுர் ஜமான் அதே ஆண்டு டிசம்பர் வரை இங்கு தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து அசதுர் ஜமான் இந்தியா வந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரை கைது செய்ய சர்வதேச காவல்துறை இன்டர்போலின் உதவி நாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.