இன்று (30.09.2017) நாடெங்கும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதன் மதச்சம்பத்தப்பட்ட மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போம்.
விஜயதசமி எனப்படும் தசரா நவராத்திரியின் பத்தாம் நாள் வருகிறது. இத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. தீயவைகளை அழித்து நல்லவைகள் பெற்ற வெற்றியையும், இன்று முதல் நன்மை ஆரம்பம் என்பதையும் குறிக்கிறது.
விஜய தசமியின் ஆன்மிக முக்கியத்துவம்
இந்த நாள் ராவணனை ராமர் அழித்த நாளாக கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரன் என்னும் அரக்கனை துர்க்கை அம்மன் வதம் செய்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. புராணத்தின் படி துர்க்கை அனைத்துக் கடவுள்களின் சக்தியையும் உள்வாங்கிய ஒரு மகாசக்தி எனவும் அதனால்தான் அவளால் மகிஷாசுரனை அழிக்க முடிந்ததாகவும் தகவல் உண்டு.
துர்க்கை அம்மன் தனது பூலோக விஜயத்தை முடித்துக் கொண்டு தனது குழந்தைகளான லட்சுமி, சரஸ்வதி, கார்த்திகேயன் மற்றும் கணேசனுடன் தன் பிறந்த வீட்டுக்கு செல்வதாக வட இந்தியாவில் ஒரு புராணக்கதை உண்டு. அம்மனுடன் அவரது தோழிகளான ஜெயா மற்றும் விஜயாவும் காவலுக்கு சென்றதாகவும் அதே புராணத்தில் சொல்லப் படுவதுண்டு. பாண்டவர்களின் வெற்றித் திருநாள் என இந்தியாவின் பல பகுதிகளில் புராணக்கதைகள் உண்டு. வட இந்தியாவில் பல இடங்களில் இன்று பயிர்த்திருவிழா கொண்டாடுகிறார்கள்.
வட இந்தியாவில் இன்று ராம் லீலா எனப்படும் ராவண வதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிரம்மாண்டமான ராவணன், அவன் தம்பி கும்பகர்ணன், ராவணன் மகன் மேகநாதன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டு அவை ராமரின் பாணத்தினால் எரிக்கப்படுகிறது. இந்த சிலைகளில் வாணங்களும், பட்டாசுகளும் வைக்கப்பட்டிருக்கும், இந்த சிலைகள் எரிக்கப்படும் போது வாணங்கள் வண்ணத்தை சொரிவதையும், பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதையும் காண மக்கள் கூட்டம் குவியும்.
தென் இந்தியாவில் நவராத்திரி கொலுவின் கடைசி நாளாக இது கொண்டாடப்படுகிறது. குழந்தைகளை கல்வி கற்க இன்று முதல் முதலாக பள்ளியில் சேர்ப்பது வழக்கம். சில கடைகளிலும் அலுவலகங்களிலும் இன்று ஆயுத பூஜை தொடங்குவது வழக்கம். ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் பல இடங்களில் இன்று தெப்ப உத்சவம் நடத்துகிறார்கள் கேரளாவில் வித்யாரம்பம் என்னும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் நிகழ்வு பல கோயில்களிலும் பள்ளிகளிலும் நடைபெறுகிறது. நெல்லில் குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத பழக்குவதே வித்யாரம்பம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்றுடன் முடிவடைகிறது. துர்க்கை அம்மனுக்கு இன்று பூஜைகள் நடத்தி முடிப்பார்கள். இன்று இரவு முதல் துர்க்கை அம்மன் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து அவள் பிறந்த வீடான கைலாசத்துக்கு அனுப்பும் கொண்டாட்டம் நடை பெறுகிறது. மைசூரில் இன்று யானைகள் ஊர்வலம் மிக விமரிசையாக நடைபெறும்
இந்த நல்ல நாளில் பத்திரிகை.காம் மக்கள் அனைவருக்கும், முப்பெரும் தேவியரின் ஆசிகள் கிடைக்க தன் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.