நாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் !
மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.
காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாகப் புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்கள். மகம் பித்துக்களுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.
இப்படிப் பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும், பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.
அதன்படி, இந்த ஆண்டு(2021) வருகின்ற சனிக்கிழமை(27.02.2021) மாசி 15ஆம் தேதி மாசிமகம் வருகிறது.
மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் சொல்லுவார்கள். மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. காரடையான் நோன்பும், சாவித்திரி விரதமும் இந்த மாசி மாதத்தில் வரும் விசேஷ விரதங்களாகும். மாசி மகத்தன்றுதான் காமதகன விழா நடைபெறுகிறது. மாசி மகத்திரு நாளில்தான் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது.
சங்கடஹர சதுர்த்தியிலேயே மிக விசேஷமானது மாசி மாத சங்கடஹர சதுர்த்தி. இந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபட்டு நலம் பெறலாம். பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றியது இம்மாசி மாதத்தில் தான். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசி மாதத்தில் தான். மற்ற மாதங்களை விட மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார். மாசி மகம் தான் அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது. முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான். பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி, பேய்களுக்கும் நல்ல கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
மாசி சுக்கிலபட்ச பஞ்சமியில் மாணவர்கள் ஸ்ரீ சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாசி மக நாளில் உயர் படிப்பு படிக்க விரும்புபவர்களும், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களும் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
மாசி மகம் திருநாளை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் தான் அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேறத் தவம் இருந்து அருள் பெற்றார். மாசி மகத்தன்று புனித நீராட முடியாதோர் மாசி மக புராணங்களைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியம் தான். மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை குள தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்குத் தெப்பத் திருவிழா நடத்துவார்கள். இதற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.
மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் அர்ச்சனை செய்து மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசி மக நாளில் அம்பிகையைக் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பமும், வெற்றியும் தேடி வரும்.