சென்னை:
இன்று மாலை 5 மணிக்கு தினமணி நாளிதழ் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக இந்துமுன்னணி அறிவித்தள்ளது.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தினமணி நாளிதழில் கட்டுரை எழுதினார். அதில், ஆண்டாள், தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ஆங்கிலேயே அறிஞர் ஒருவர் தெரிவித்த கருத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த இல.கணேசன், எச்.ராஜா, இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்துத்துவ ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இவர்களில் எச்.ராஜா, வைரமுத்துவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து வைரமுத்து, தான் தவறான நோக்கத்தில் எழுதவில்லை என்றும் அப்படியும் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் மன்னிப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்துத்துவ ஆதரவாளர்கள் தொடரந்து வைரமுத்துவுக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலைவயில் சென்னை அம்பத்தூரில் உள்ள தினமணி அலுவலகம் முன்பு இன்று மாலை ஐந்து மணிக்கு முற்றுகை இடப்போவதாக இந்துமுன்னணி அறிவித்துள்ளது.
“குறிப்பிட்ட கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி இதழ் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்கள் எதிர்ப்பு தொடரும்” என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.