பெங்களூரு

கர்நாடக அமைச்சர்களுக்கு அம்மாநில முதல்வர் இலாகா  ஒதுக்கீடு செய்யாததற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு கவிழ்ந்ததையொட்டி பாஜக அரசு அமைத்தது.   பாஜகவின் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார்.  ஆயினும் அவர் அமைச்சரவையை அமைக்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கடந்த 20 ஆம் தேதி அமைச்சர்களை அறிவித்தார்.   அவர்கள் பதவி ஏற்று கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

தற்போது முதல்வர் எடியூரப்பா முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு இறுதி மரியாதை அளிக்க டில்லி சென்றுள்ளார்.  இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம், “அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போது தங்களுக்குப் பதவி கேட்டு எடியூரப்பாவைத் தொல்லை செய்து வருகின்றனர்.  அதனால் அவரால் அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்க முடியாத நிலையில் உள்ளார்.

அடிக்கடி டில்லிக்குச் சென்று வரும் எடியூரப்பாவால் இன்னும் இலாகாக்கள் குறித்து பாஜக செயல் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதலை பெற முடியவில்லை.   குதிரைப்பேரம் மூலம் பின்பக்க வழியாக ஆட்சியைப் பிடித்த பாஜகவால் இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது   பாஜக தலைமையைப் பொறுத்தவரை எடியூரப்பாவை மதிக்காமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.