பெங்களூரு

கர்னாடகா சட்டசபை வைர விழா கொண்டாட்ட செலவை பாதிக்கும் கம்மியாக முதல்வர் சித்தராமையா குறைத்துள்ளார்.

பெங்களூர் சட்டசபையின் கட்டிடமான விதான் சவுதா கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது.  அதையொட்டி வைரவிழாவை விமரிசையாக கொண்டாட சபாநாயகரும், மேல்சபை தலைவரும் முடிவு செய்தனர்.  வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் விழா நடத்த திட்டமிட்டனர்.   எம் எல் ஏக்கள் மற்றும் எம் எல் சிக்களுக்கு தங்க நாணயங்களும், ஊழியர்களுக்கு வெள்ளி தட்டும் வழங்க முடிவு செய்தனர்.  இது தவிர ஆடம்பரமாக விழா நடத்தவும் முடிவு செய்து ரூ.26 கோடி நிதி வேண்டும் என முதல்வருக்கு தெரிவித்தனர்.

இதற்கு மக்கள் மட்டுமின்றி எதிர்கட்சித்தலைவர்களும், சில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று  சபாநாயகர் கோலிவாட், மேல்சபை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் முதல்வர் சித்தராமையாவை சந்தித்தனர்.  அப்போது சித்தராமலிங்கையா, “தற்போது மாநிலமெங்கும் கடும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.26 கோடி விழாவுக்கு செலவழிக்க முடியாது.  விலை உயர்ந்த பரிசுகள் எம் எல் ஏக்கள் மற்றும் எம் எல் சிக்களுக்கு வழங்க வேண்டாம்.   ஒரே நாள் விழா நடத்தினால் போதும்.   விழாவின் மொத்த செலவு ரூ. 10 கோடிக்குள் அடங்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

சபாநாயகர், “வைர விழா கொண்டாட்டத்திற்கு நிதியை குறைத்து கொடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  அவர் ஒதுக்கும் நிதியைக் கொண்டு விழாவை சிறப்பாட நடத்த முடிவு செய்துள்ளோம்” என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.