பெங்களூரு
கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் மீதான ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தி அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இது குறித்து முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய அளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது
இன்று கர்நாடகா துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், அமைசர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்ட முடிவில் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சித்தராமையா,
”ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் கவர்னர் அளித்துள்ள சட்டவிரோத ஒப்புதல் என்பதால் நீதிமன்றத்தீல் சட்ட ரீதியாக போராடுவேன். எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் மீது நாங்கள் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிய அனுமதி தரப்பட்டுள்ளது”
எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்,
“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே கவர்னர் அனுப்பிய சம்மனுக்கு முதல்-மந்திரி தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க அனுமதி வழங்கியது உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரபராதி என அவர் நீரூபிப்பார். அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது”
என்று கூறியுள்ளார்.