சென்னை:

ஜினி தேவையில்லாமல் பேசுவதற்கு பதில் வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் தெரிவித்து உள்ளார்.

கடந்த 13ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

ஆனால், ரஜினியோ, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அப்போது வெளியான பத்திரிகை செய்திகளைக் கொண்டே தான் பேசியதாகவும் விளக்கம் அளித்தார்.

ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், ரஜினி யோசித்து பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று ராயபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு தக்க நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாக அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளது அவருடைய கருத்தாக இருக்கலாம். அது கட்சியின் கருத்து இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மேலும்,  நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை என்றவர், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம்.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. 1971ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் அதிமுக பயப்படாது.

இவ்வாறு கூறினார்.